உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / குமரியில் மோடி மேற்கொள்ளும் தியானம்: மம்தா, விவேகானந்தருக்கு என்ன சம்பந்தம்?

குமரியில் மோடி மேற்கொள்ளும் தியானம்: மம்தா, விவேகானந்தருக்கு என்ன சம்பந்தம்?

சென்னை: கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தில், பிரதமர் மோடி மூன்று நாட்கள் தியானம் செய்வதன் பின்னணியில், பல்வேறு அரசியல் கணக்குகள் இருப்பதாக, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.இறுதிகட்ட பிரசாரத்தை முடித்து, இன்று மாலை கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி, ஜூன் 1 வரை மூன்று நாட்கள், கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்கிறார்.

கடும் எதிர்ப்பு

கடந்த 2014ல் மஹாராஷ்ட்ராவின் பிரதாப்கர் கோட்டை, 2019ல் உத்தரகண்டின் கேதார்நாத் சென்ற பிரதமர் மோடி, இந்த முறை கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தேர்வு செய்திருக்கிறார். கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் என்பது, 1962 முதல் 1970 வரை, ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். விவேகானந்தர் தியானம் செய்த பாறையில், அவருக்கு நினைவு மண்டபம் கட்ட முடிவு செய்தபோது, கிறிஸ்துவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது; மதப் பிரச்னையாகவும் மாறியது.அதைத் தொடர்ந்து, அன்றைய ஆர்.எஸ்.எஸ்., தலைவர் குருஜி கோல்வால்கர், நினைவு மண்டபம் கட்டும் பணியை முடிக்கும் பொறுப்பை, அன்றைய ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர் ஏக்நாத் ரானடேவிடம் ஒப்படைத்தார். நினைவு மண்டபம் அமைக்க அனுமதி மறுத்த அன்றைய முதல்வர் பக்தவத்சலம், 'விவேகானந்தர் மூன்று நாட்கள் தியானம் செய்த இடம் என்பதற்கான சிறிய நினைவுச் சின்னத்தை அமைத்தால் போதும்' என்றார்.அதுபோல, 1963 ஜனவரி 17ல் அங்கு பெயர் பலகையும் வைக்கப்பட்டது. நினைவு மண்டபம் கட்ட, அப்போது மத்திய கலாசாரத் துறை அமைச்சராக இருந்த ஹூமாயூன் கபீரும் எதிர்ப்பு தெரிவித்தார். 'நினைவு மண்டபம் கட்டினால் பாறையின் இயற்கை அழகு கெட்டு விடும்' என்றார்.முதல்வர் பக்தவத்சலம், மத்திய அமைச்சர் ஹூமாயூன் கபீரின் எதிர்ப்பையும் மீறி, நினைவு மண்டபம் கட்ட முடிவெடுத்த ஏக்நாத் ரானடே, பல்வேறு யுக்திகளை கையாண்டார். ஹூமாயூன் கபீர் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்திற்குச் சென்ற ரானடே, நிருபர்கள் கூட்டம் நடத்தி, 'வங்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹூமாயூன் கபீர், வங்கத்தின் பெருமையான விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் கட்ட இடையூறு செய்கிறார்' என்றார்; அது பெரும் பிரச்னையானது.

முறியடிப்பு

ஜனசங்கம் கட்சியினரும், விவேகானந்தர் பக்தர்களும் கபீருக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தினர். எதிர்ப்பு வலுப்பதை உணர்ந்த கபீர், 'விவேகானந்தருக்கு நினைவு மண்டபம் கட்டுவதை நான் எதிர்க்கவில்லை' என்றார்.அதேபோல பக்தவத்சலத்தின் எதிர்ப்பை முறியடிக்க, 300க்கும் அதிகமான எம்.பி.,க்களின் கையெழுத்தைப் பெற்று, அன்றைய பிரதமர் நேருவிடம் அளித்தார். இதனால், அனுமதி அளிக்க வேண்டிய கட்டாயம் பக்தவத்சலத்திற்கு ஏற்பட்டது.நினைவு மண்டபம் அமைக்கும் குழுவில், தி.மு.க., உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் நியமிக்கப்பட்டனர். தி.மு.க., தலைவர் அண்ணாதுரையை நேரில் சந்தித்து, அவருடைய ஆதரவையும் ரானடே பெற்றார். இப்படி நீண்ட போராட்டத்திற்குப் பின் கட்டப்பட்ட விவேகானந்தர் நினைவு மண்டபம், 1970ல் திறக்கப்பட்டது. நினைவு மண்டப பணிகள் முடிந்ததும், 'விவேகானந்த கேந்திரா' என்ற அமைப்பை நிறுவிய ரானடே, நாடு முழுதும் கல்வி, யோகா, தியானம். சுற்றுச்சூழல், இயற்கை விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டார். நினைவு மண்டபத்திற்கு அருகிலேயே விவேகானந்த கேந்திராவின் தலைமையகம் உள்ளது.விவேகானந்தர் நினைவு மண்டப போராட்டம் என்பது, ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகும். கட்சியின் முக்கிய கூட்டங்கள், பயிற்சி முகாம்களில், இந்த போராட்ட வரலாறு பெருமிதத்துடன் விவரித்து கூறப்படும்.

முக்கிய பங்கு

அயோத்தி ராமர் கோவில் போராட்டத்திற்கு ஊக்கம் தந்ததே, இந்தப் போராட்டம்தான் என, பா.ஜ.,வினர் கூறுகின்றனர். இந்தப் பின்னணியில்தான் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில், பிரதமர் மோடி தியானம் செய்யவிருக்கிறார்.ஜூன் 1ல் உத்தர பிரதேசம் 13, பஞ்சாப் 13, மேற்கு வங்கம் 9, பீஹார் 8, ஒடிசா 6, ஹிமாச்சல் பிரதேசம் 4, ஜார்க்கண்ட் 3, சண்டிகர் 1 ஆகிய 57 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இவை அனைத்தும் பா.ஜ.,வுக்கு சாதகமான தொகுதிகள். விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைத்த வரலாற்றில், மேற்கு வங்கத்திற்கு முக்கியப் பங்கு இருப்பதால், பிரதமர் மோடி தியானம் செய்வது, வங்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பா.ஜ.,வினர் நம்புகின்றனர்.கடந்த 1963ல் ஹூமாயூன் கபீரின் எதிர்ப்பை முறியடிக்க, மேற்கு வங்கத்தை பயன்படுத்தினார் ரானடே. இப்போது மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியை வீழ்த்த, விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்யவிருக்கிறார் பிரதமர் மோடி என்கின்றனர் பா.ஜ.,வினர்.பிரதமர் மோடியின் தியானம் பா.ஜ.,வுக்கு கை கொடுக்குமா என்பது, ஜூன் 4ல் தெரிந்து விடும்.

தேர்தல் கமிஷனுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்

இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதம்:இறுதி கட்டத் தேர்தல், 57 தொகுதிகளில், ஜூன் 1ம் தேதி நடக்கவுள்ளது. இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, இன்றும், நாளையும் கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்கிறார். இந்த காட்சியை, 'டிவி' மற்றும் சமூக ஊடகங்களில் ஒளிபரப்பு செய்தால், தேர்தல் முடிவுகளில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பிரதமர் மோடி, கன்னியாகுமரியில் தியானம் செய்யும் காட்சியை, 'டிவி', நாளிதழ்கள், சமூக ஊடகங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

அசோகன்
மே 30, 2024 13:57

இந்திய தாயின் சிறந்த ஆன்மீக மஹான் விவேகானந்தருக்கு மண்டபம் கட்ட இவ்வளவு கஷ்டப்படுத்தினர்களா... கேட்கவே கோபமாக வருகிறது... புட்டினை போல் ஆட்சி கொண்டுவந்து தேச பற்று இல்லாதவர்களை சுட்டு தள்ளவேண்டும்


hari
மே 30, 2024 12:48

தேர்தல் அதிகாரி விளக்கம் கொடுத்தாச்சு....


SANKAR
மே 30, 2024 12:32

இது ஒரு ஏமாற்று வேலை


அம்பாசமுத்திரம்
மே 30, 2024 11:40

இவர் பாட்டுக்கு ஒரு ஓரமா தியானம் செஞ்சிட்டுப்போகட்டுமே... அதுக்காக மூணுநாளைக்கு சாதாரண மக்களை முடக்கி, அவிங்க வியாபாரத்தை முடக்கி வயத்தெரிச்சலைக் கொட்டிக்கணுமா? 10 நிமிசம் தியானம் பண்ணிட்டு இடத்தை காலிபண்ணுங்க. டில்லி வெயிலில் சொந்த வுட்டில் நாள் கணக்கில் தியானம்.பண்ணுங்க.


Thirumalaimuthu L
மே 30, 2024 14:42

தம்பி அது பிரதமரின் அவரின் தனிப்பட்ட உரிமை. ஏன் கொடைக்கானல் போய் 3 நாள் ஓய்வு எடுக்கும் போது சாதாரண மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பாட்டதே அப்போது எங்கே இருந்தீங்க..


venugopal s
மே 30, 2024 11:15

படத்தைப் பார்த்தால் பசுத்தோல் போர்த்திய புலி போல் இருக்கிறது!


theruvasagan
மே 30, 2024 08:54

மோடி தியானத்துக்கு பதிலளிக்கும் வகையில் இவங்க நினைவிடத்தில் பேப்பர் தயிர்வடை சகிதம் படையல் போட்டு ரிசல்ட் வரும் தேதி வரைக்கும் இடைவிடாமல் பஜனை செய்யலாமே. யார் தடை சொல்லப் போறாங்க.


மாயவரம் சேகர்
மே 30, 2024 08:49

பிரதமர் தேர்தல் நடக்காத நடந்து முடிந்த தமிழ் மாநில கன்னியாகுமரியில் மெளன விரதம் இருப்பது எதிர்க் கட்சிகளுக்கு கிலி ஏற்படுத்துகிறது.. எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணி கூட்டம் டெல்லியில் தேர்தல் நாளில் நடப்பது மட்டும் சரியா? ஊடகங்களுக்கு ஏன் தடை வேண்டும்? கருத்து சுதந்திரம் எங்கே போயிற்று? இவர்கள் சார்ந்த ஊடகங்கள் இண்டி கூட்டணி கூட்டம் பற்றி செய்தி வெளியிடாமல் இருக்குமா?


S.Ambigapathi
மே 30, 2024 08:44

அவரவர் வழியில் அரசியல். இதில் பிராடு என்றால் என்ன அர்த்தம்.


VENKATASUBRAMANIAN
மே 30, 2024 08:40

முட்டாள்தனமான வாதம். உத்தேசமாக 500 தொகுதிகள் ஓட்டு பதிவு நிறைந்த நிலையில் இந்த 50 தொகுதிகளுக்காக பாஜகவிற்கு கஷ்டப்பட தேவையில்லை. தானாகவே 50% அதிகமான இடங்களில் வெற்றி பெறுவார்கள். எதிர் கட்சிகளுக்கு அரசியல் செய்ய தெரியவில்லை. சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக இதை பிரபல படுத்தி விட்டார்கள். இல்லையெனில் மிக சிலருக்கே தெரிந்திருக்கும். இப்போது பட்டி தொட்டியெல்லாம் இதை பற்றி இந்தியா முழுதும் பேசப்படும்.


nizamudin
மே 30, 2024 09:47

நம்பிக்கை உண்டு பின்பு ஏன் இந்த நடவடிக்கை


பேசும் தமிழன்
மே 30, 2024 08:16

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போல இருக்கிறது.... திமுக.... கான் கிராஸ்.... கம்யுனிஸ்ட் கட்சிகளின் நடவடிக்கை.... வேண்டுமானால் நீங்களும் கருணாநிதி சமாதியில் தியானம் செய்ய வேண்டியது தானே ???


மேலும் செய்திகள்