உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / போட்டியிட சீட்.. தோல்வி அடைந்தோருக்கு வாய்ப்பில்லை; தேர்தலுக்காக காங்கிரசில் புது திட்டம்

போட்டியிட சீட்.. தோல்வி அடைந்தோருக்கு வாய்ப்பில்லை; தேர்தலுக்காக காங்கிரசில் புது திட்டம்

தமிழக காங்கிரசில், ஐந்தாண்டுகள் பதவி வகித்த மாவட்டத் தலைவர்களுக்கு, 'கல்தா' கொடுப்பதற்கும், புதிய மாவட்டத் தலைவர்களை நியமிக்கவும், டில்லியிலிருந்து, 77 மாவட்ட பார்வையாளர்கள் வர உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. வரும் 2029ம் ஆண்டு லோக்சபா தேர்தல் மற்றும் சில மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற, நாடு முழுவதும் கட்சியை சீரமைக்கும் திட்டத்தை, டில்லி மேலிடம் செயல்படுத்த உள்ளது. இப்புதிய திட்டத்தின்படி, வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பார்வையாளர்கள் அடங்கிய குழு, ஒவ்வொரு மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படும்.

டில்லிக்கு பரிந்துரை

இக்குழு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, உள்ளூர் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் கலந்துரையாடும். அவர்கள் கூறும் கருத்துக்கள் அடிப்படையில், மாவட்டத் தலைவர் பதவிக்கு, இருவரை தேர்வு செய்து, டில்லிக்கு பரிந்துரை செய்யும். இதை பரிசீலித்து டில்லி மேலிடம் முடிவெடுக்கும். ஏற்கனவே, ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருப்போர் பெயர், பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும், அவர் தகுதியின்மை பட்டியலுக்கு தள்ளப்படுவார். மேலும் மாவட்டத் தலைவர்கள் மற்றும் வட்டாரத் தலைவர்களுக்கு, அதிக அதிகாரத்தையும், பொறுப்பையும் வழங்க டில்லி மேலிடம் முடிவு செய்துள்ளது. தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில், மாவட்டத் தலைவர்களும் இடம் பெறுவர். இந்த புதிய அணுகுமுறையால், கட்சி கட்டமைப்பு பலப்படுத்தப்படும் என, டில்லி மேலிடம் கருதுகிறது. குஜராத், ஹரியானா, பஞ்சாப், சத்தீஸ்கர், தெலுங்கானா உட்பட ஏழு மாநிலங்களில், புதிய திட்டத்தின் கீழ், மாவட்டத் தலைவர்களை தேர்வு செய்யும் பணி முடிந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் கட்சி அமைப்பு ரீதியாக உள்ள 77 மாவட்டங்களுக்கும், டில்லியிலிருந்து மாவட்டத்திற்கு, தலா ஒரு பார்வையாளர் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது: தமிழக காங்கிரசில், மாவட்டத் தலைவர்கள் பதவியில் சிலர் நீண்ட காலமாக உள்ளனர். இவர்களில் சிலர் கட்சி பணிகளை சரியாக கவனிப்பதில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் சுறுசுறுப்பாக இருக்கின்றனர்.

புதிய முகங்கள்

மற்ற நேரங்களில் கட்சியை கண்டுகொள்வதில்லை. அப்படிப்பட்ட மாவட்டத் தலைவர்களுக்கு, கல்தா கொடுப்பதற்காகவே, டில்லி மேலிடப் பார்வையாளர்கள் தமிழகம் வருகின்றனர். புதிய மாவட்டத் தலைவர்கள், தேர்வு பணிகளை விரைவாக முடித்து, தேர்தல் களத்தை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத் தலைவர் பதவியை இழப்போருக்கு, மாநில அளவில் பதவிகள் வழங்கப்படும். தேர்தலில், ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று முறை போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது. புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை