உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராஜ்யசபாவில் இனி ஒத்திவைப்பு தீர்மானம் இல்லை: எதிர்க்கட்சிகளுக்கு துணை ஜனாதிபதி கடிவாளம்

ராஜ்யசபாவில் இனி ஒத்திவைப்பு தீர்மானம் இல்லை: எதிர்க்கட்சிகளுக்கு துணை ஜனாதிபதி கடிவாளம்

“ஒட்டுமொத்த சபையும் ஒருமனதாக ஏற்றால் மட்டுமே, ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னையை விவாதத்திற்கு ஏற்க முடியும்,” என ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான சி.பி.ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

விவாதம்

பார்லி., கூட்டத்தொடரில் ஒவ்வொரு நாளும், சபை அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டு அதன்படி நடத்திச் செல்லப்படும். அந்த வழிகாட்டுதல்களின்படி லோக்சபாவில் சபாநாயகரும், ராஜ்யசபாவில் அதன் தலைவராக இருக்கும் துணை ஜனாதிபதியும் சபை அலுவல்களை நடத்திச் செல்வர். இதில், திடீரென ஏதேனும் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டுமெனில், அந்த நாளில் திட்டமிடப்பட்டிருந்த சபை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு, குறிப்பிட்ட அந்த பிரச்னை குறித்து மட்டும் விவாதிக்கப்படும். இதற்காக, எதிர்க்கட்சிகள் கையில் இருக்கும் ஆயுதம் தான் ஒத்திவைப்பு தீர்மானம். லோக்சபாவில், இதை ஒத்திவைப்பு தீர்மானம் என அழைக்கின்றனர். ராஜ்யசபாவில் இப்படி நேரடியாக அழைப்பதில்லை. அதற்கு பதிலாக விதி எண் 267ன் கீழ் விவாதம் நடத்தக்கோரி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ராஜ்யசபா தலைவரிடம் நோட்டீஸ்கள் வழங்குவர். பெரும்பாலும் இந்த நோட்டீஸ்கள் நிராகரிக்கப்படும். ஜக்தீப் தன்கர் காலத்தில் நோட்டீஸ்கள் நிராகரிக்கப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இந்நிலையில், ராஜ்யசபாவின் புதிய தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றதும், அவரிடமும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் விதி 267ன் கீழ் நோட்டீஸ்கள் வழங்கினர். கடந்த மூன்று நாட்களாக அதை எல்லாம் அவர் நிராகரித்தபடியே இருந்தார்.

திருத்தம்

இந்நிலையில், இந்த விதியை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து நேற்று அவர் அளித்த விளக்கம்: லோக்சபாவில் விதி எண் 75 - 3ன் கீழ் ஒத்திவைப்பு தீர்மானம் அனுமதிக்கப்படுகிறது. அதை, ராஜ்யசபா ஒத்திவைப்பு விதியின் கீழ் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது. ஏனெனில், லோக்சபா ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு இருக்கும் அரசியல் சாசன உரிமை, ராஜ்யசபா விதி எண் 267க்கு கிடையாது. எனவே, இந்த விதியின் கீழ் வழங்கப்படும் நோட்டீஸ்களை அவ்வாறு கருத முடியாது. அலுவல் ஆய்வுக்குழுவில் இப்பிரச்னை குறித்து விவாதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டு, அன்றைய அலுவல் குறிப்பேட்டில் இடம்பெற்று இருந்தால் மட்டுமே, இந்த விதியின் கீழ் விவாதிக்க அனுமதி கி டைக்கும். சம்பந்தமே இல்லாத வேறு பிரச்னைகளை பட்டியலிட்டு, இந்த விதியின் கீழ் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டுமென கேட்பதை ஏற்க முடியாது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில், கடந்த 2000ம் ஆண்டில் தான் விதி எண் 267ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த விதி தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறியே திருத்தம் செய்யப்பட்டது. அப்போது முதல் இப்போது வரை, வெறும் எட்டு முறை மட்டுமே விதி எண் 267ன் கீழ் விவாதம் நடந்துள்ளது. அதுவும் ஒட்டுமொத்த சபையும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டதால் விவாதம் நடந்தது. கடந்த 40 ஆண்டுகளில் மிகவும் அரிதாகவே இந்த விதியின் கீழ் அனுமதி தரப்பட்டுள்ளது. எனினும், பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை விவாதிக்க ராஜ்யசபாவில் அனுமதி உண்டு. அதற்குரிய வழிமுறைகளை எதிர்க்கட்சிகள் பின்பற்ற எந்த தடையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ