'த.வெ.க., கூட்டணிக்கு வராத நிலையில், தி.மு.க., ஆட்சிக்கு வருவதை தடுக்க, அ.தி.மு.க., பலம் பெற வேண்டும்; இதற்கு, அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்ப்பது அவசியம்' என, பழனிசாமி தரப்புக்கு பா.ஜ., மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. அதற்கு, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், தனி சின்னத்தில் போட்டியிடுவதாக உறுதி அளித்தால், கூட்டணியில் சேர்ப்பது குறித்து பரிசீலிப்பதாக, பழனிசாமி தரப்பில் கூறப்பட்டுள்ளது. பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில் தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உறுதியாக உள்ளனர். எனவேதான், 'பா.ஜ.,வுடன் இனி கூட்டணி இல்லை' என்று அறிவித்திருந்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சமாதானப்படுத்தி, தங்கள் கூட்டணியில் சேர்த்தனர். ஆனால், அ.தி.மு.க.,வுக்கு பழனிசாமி தலைமை ஏற்ற நிலையில், கட்சியில் இருந்து பன்னீர்செல்வம், தினகரன் , சசிகலா ஆகியோர் நீக்கப்பட்டதால், அ.தி.மு.க., ஓட்டு சதவீதம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துஉள்ளது. கடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., தோல்வியை சந்தித்ததால், அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்கும் முயற்சியில் பா.ஜ., ஈடுபட்டது; பலன் கிடைக்கவில்லை. அ.தி.மு.க.,வின் பலவீனம், தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்கிறது. தற்போதைய அரசியல் சூழலில், த.வெ.க., தங்களுடன் கூட்டணிக்கு வரும் என்று, பழனிசாமி எதிர்பார்த்தார். ஆனால், 'த.வெ.க., கூட்டணியில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்துள்ளதால், அ.தி.மு.க.,வுடனான கூட்டணிக்கு பிரேக் விழுந்துள்ளது. இந்நிலையில், செங்கோட்டையனும் அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டதால், ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்படக்கூடும் என கூறுகின்றனர். இப்படிப்பட்ட பல்வேறு நெருக்கடிகளால், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என்று, பா.ஜ., தரப்பில் நினைக்கின்றனர். இதையடுத்து, பா.ஜ., மேலிட தலைவர்கள், சமீபத்தில் பழனிசாமிக்கு நெருக்கமான உறவினர்களிடம் பேசியுள்ளனர். 'அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றால், பன்னீர்செல்வம், தினகரன், செங்கோட்டையன் ஆகியோர், அ.தி.மு.க.,விலோ அல்லது அ.தி.மு.க., கூட்டணியிலோ சேர்க்கப்பட வேண்டும்' என, பா.ஜ., தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆட்சேபனை இல்லை அதற்கு பழனிசாமி உறவினர்கள், 'பிரிந்து சென்றவர்களை சேர்ப்பதில் பழனிசாமிக்கு உடன்பாடில்லை' என கூறிய நிலையில், 'அ.தி.மு.க., தோற்றால், த.வெ.க., வளர்ந்து விடும்' என, பா.ஜ., மேலிட தலைவர்கள் எச்சரித்ததை அடுத்து, 'பன்னீர்செல்வம், தினகரன், செங்கோட்டையனை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள ஆட்சேபனையில்லை. தேவையானால், அவர்கள் தனி சின்னத்தில் போட்டியிட்டுக் கொள்ளலாம். இதற்கு, பா.ஜ., உறுதி அளித்தால், பழனிசாமி தன்னுடைய உறுதியான முடிவில் இருந்து பின் வாங்க வாய்ப்புள்ளது' என, அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -