சென்னை: ''முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், கடந்த 2011 சட்டசபை தேர்தலில் செய்த தவறுக்காக, தற்போது பலன் அனுபவித்து வருகிறார்,'' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசினார். சென்னையில் நேற்று நடந்த ம.தி.மு.க., நிர்வாகக் குழு கூட்டத்தில், வைகோ பேசியதாவது: கடந்த 2011ல் சட்டசபை தேர்தல் நேரத்தில், அ.தி.மு.க.,விலிருந்து கூட்டணி பேச்சு நடத்த பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயகுமார் ஆகியோர் என்னைத் தேடி வந்தனர். என்னிடம் பேச்சு நடத்திய பின், 12 தொகுதிகள் தருவதாக கூறினர்; ஏற்க முடியாது என கூறினேன். 'ஜெயலலிதாவிடம் பேசிவிட்டு, நல்ல பதிலை கூறுங்கள்' என, பன்னீர்செல்வத்திடம் சொல்லி அனுப்பினேன். 'அப்படியே செய்கிறோம்' என, சொல்லி விட்டு சென்றார். அன்று மாலை 5:00 மணி வரை, என் மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்யாமல், அருகில் வைத்து காத்திருப்பேன் என்றும் சொல்லி அனுப்பினேன். ஆனால், மாலை 5:00 மணி வரை காத்திருப்பதாக நான் கூறியதை மாற்றி, 'வைகோ கூட்டணிக்கு வர தயாராக இல்லை' என, ஜெயலலிதாவிடம் பன்னீர் செல்வம் கூறி விட்டார். அந்த தேர்தலில், 15 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும் தர ஜெயலலிதா தயாராக இருந்தார் என்பது, பின்னர் தான் எனக்கு தெரிய வந்தது. பன்னீர்செல்வத்தால், அ.தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., அப்போது இடம் பெற முடியாமல் போனது. அந்த தேர்தலை ம.தி.மு.க., புறக்கணித்தது. கூட்டணி விவகாரத்தில் பன்னீர்செல்வம், அன்று ம.தி.மு.க.,வுக்கு துரோகம் இழைத்தார். அதற்கான, பலனை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதா எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். 'உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். கூட்டணி விவகாரத்தில் முடிவெடுப்பது, உங்கள் சொந்த உரிமை. ஆனால், உங்கள் கட்சிக்கு எது ஏற்றதோ, அந்த முடிவை தாராளமாக எடுங்கள்' என, அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். தஞ்சாவூரில் கொளுத்தும் வெயிலில், ஒரு நாள் என்னை ஜெயலலிதா நேரடியாக சந்திக்க வந்தார். 'எம்.ஜி.ஆருக்காக கூட, ஜெயலலிதா வெளியில் இறங்கி பேசியது இல்லை. ஆனால், உங்களுக்காக இறங்கி இருக்கிறார்' என, என்னிடம் ஒரு பத்திரிகையாளர் கூறினார். சிலரின் சதி செயல்களால் வர வேண்டிய கூட்டணி வராமல் போனது. கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் வீட்டிற்கு செல்லாமல், ஒரே ஓட்டமாக சென்னை வந்து விட்டார் விஜய். அதை பற்றி எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல், வருத்தப்படாமல், 'நிதி கொடுக்கிறேன்; எல்லாரும் என்னை பார்க்க வாருங்கள்' என, அழைத்துள்ளார். இழவு கேட்பவர்கள், இழவு வீட்டிற்கு சென்று தான் கேட்பர். யாரும் அவர்கள் வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரிக்க மாட்டார்கள். தமிழக வரலாற்றில் யாரும் செய்யாத பித்தலாட்டத்தை, விஜய் செய்திருக்கிறார். 'தி.மு.க.,வுக்கும் எங்களுக்கும் தான் போட்டி' என்றெல்லாம் விஜய் பேசியிருக்கிறார். அரசியலில் ஆத்திச்சூடி கூட அறியாத ஒரு மனிதன் விஜய். ஆட்சிக்கு வந்து, தற்போதே முதல்வராகி விட்டது போன்று, விஜய் கனவுலகத்தில் மிதந்து கொண்டிருக்கிறார். தி.மு.க.,வை நாங்கள் ஏன் விமர்சனம் செய்வதில்லை என்றால், கூட்டணி கட்சி பற்றி விமர்சனம் செய்வது தர்மம் கிடையாது. சமத்துவ நடைபயணம் என்கிற பெயரில், ஜன., 2 முதல் 12 வரை நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக அரசின் பரிந்துரைக்கு எதிர்ப்பு
ம.தி.மு.க., நிர்வாகக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அரசியல் கட்சிகளின் சாலைப் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு, தமிழக அரசின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள விதிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், ஒருவரின் குடியுரிமையை தீர்மானிப்பதை, சிறப்பு வாக்காளர்கள் பட்டியல் திருத்த பணி யுடன் இணைத்துள்ளனர். கடந்த 2003ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை போல, இதைப் பார்க்க முடியாது. இந்தத் திட்டம் மிக ஆபத்தானது.