கட்சிகளை உசுப்பேத்தும் உத்தேச தொகுதிகள் பங்கீடு பட்டியல்கள்: ஐ.டி., விங்குகள் அட்ராசிட்டி
மதுரை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி, தொகுதிகள் பங்கீடு என அரசியல் கட்சிகள் ஆரவாரமாய் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், கட்சிகளை உசுப்பேத்தும் வகையில் உத்தேச தொகுதிகள் பங்கீடு பட்டியல்கள் சோஷியல் மீடியாக்களில் வெளியாகி தி.மு.க., -அ.தி.மு.க., போன்ற கட்சிகளையும் அதிர வைக்கின்றன. தி.மு.க.,வில் இருந்த கூட்டணி கட்சிகள் இந்த தேர்தலிலும் தொடர்கின்றன. த.வெ.க., வின் விஜய் வருகைக்கு பின்னரும், த.வெ.க., உடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு 'ஆட்சியில் பங்கு' என கொளுத்திப் போடப்பட்டதால் தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்., வி.சி., உள்ளிட்ட கட்சிகளுக்குள் கூட்டணி மாற்றம் குறித்து மறைமுக ஊசலாட்டம் ஏற்பட்டுள்ளதால் சற்று அதிர்வு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., கூட்டணிக்குள் பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா தரப்பை சேர்ப்பதன் மூலம் தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்கும் என பா.ஜ., பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. தி.மு.க.,வில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் ஐவர் குழுவை காங்கிரசும், அ.தி.மு.க.,வுடன் பேச்சு நடத்த மேலிட பார்வையாளராக பியூஷ் கோயலை பா.ஜ.,வும் ஏற்படுத்தி தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை களைகட்டுகிறது. தி.மு.க., கூட்டணியில் தி.மு.க.,வுக்கு 184, காங்., 15, வி.சி., 15, ம.தி.மு.க., இ.கம்யூ., மார்க். கம்யூ., தலா 3, மய்யம் 10, ஐ.யூ.எம்.எல்., ம.ம.க., த.வா.க., ம.வி.க., ஆ.த.பே., கொ.ம.தே.க., தலா 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டது. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க.,வுக்கு 170, பா.ஜ.,23, பா.ம.க., 23, தே.மு.தி.க., 6, அ.ம.மு.க., 6, ஓ.பி.எஸ்., 3, த.ம.கா., தலா 1 என்ற மற்றொரு பட்டி யலும் வெளியாகின. இதன் எதிரொலியாக இது யாரோ கிளப்பி விட்ட வதந்தி. இதுபோன்ற தொகுதி பங்கீடு முடிவாகவில்லை என அ.ம.மு.க.,வின் தினகரன் ஆதங்கத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுபோல் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வெளிப்படையாக ஆதங்கத்தை தெரிவிக்கவில்லையென்றாலும் கூட்டணி கட்சி தலைமை மீது ஒருவித மன சலனத்தையும், சோஷியல் மீடியாக்களை பின்தொடருவோருக்கு (பாலோவர்ஸ்) குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அரசியல் கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: இந்த தேர்தலில் 'வெர்சுவல் வாரியர்ஸ்' எனப்படும் சோஷியல் மீடியாக்களை பின்பற்றுவோர் தாக்கம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடிகர் தொடங்கிய கட்சி தொடர்பாக 'பாசிட்டிவ்' 'போஸ்ட்'டுகளை பதிவிட்டு, அதிக 'லைக்' செய்து பின்தொடரவும், 'கமெண்ட்ஸ்' பதிவிட வும் மாதச் சம்பளம் நிர்ணயித்து அக்கட்சியில் 'வெர்சுவல் இளைஞர்' கட்டமைப்பையே உருவாக்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக அரசியல் கட்சிகளின் 'ஐ.டி., விங்' சார்பில் எதிர்கட்சி கூட்டணிகளை குழப்பி 'அரசியல்' செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற உத்தேச தொகுதி பங்கீடு பட்டியல் என வேண்டு மென்றே பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதற்கு சம்பந்தப்பட்ட கட்சி 'ஐ.டி.,விங்'கும் பதிலடியாக 'போஸ்ட்'டுகளை பதிவிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இது கட்சிகளுக்குள் மனக்கசப்பை ஏற்படுத்துகிறது. இதனால் எந்த செய்தி உண்மை, எது போலி என மறுநாள் நாளிதழ்களில் பார்த்த பின் தான் முடிவு செய்ய முடிகிறது என்றனர்.