உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மோடி சொன்ன கதைகளில் ராமாயண பாத்திரங்கள்

மோடி சொன்ன கதைகளில் ராமாயண பாத்திரங்கள்

அயோத்தி : வால்மீகி ராமாயணத்தில் வரும் பல்வேறு பாத்திரங்களின் பெயர்களை பிரதமர் மோடி தன் உரையில் குறிப்பிட்டார்.

சபரி:

பழங்குடி இளவரசி. ஞானம் பெற குரு தேடுகிறாள். மாதங்கி முனிவரின் சிஷ்யை ஆகிறாள். அவர் மரணம் அடையும் வேளையில், ''ராம பிரான் உன்னை தேடி வந்து ஆசி தருவார்'' என்கிறார்.வனவாசம் வரும் ராமர், சீதா, லட்சுமணன் அவளது குடிலுக்கு வருகின்றனர். கொய்து வந்த பழங்களை ருசி பார்த்த பின் ராமருக்கு படைக்கிறாள். லட்சுமணன் அதற்காக கோபப்படுகிறான். ராமர் சமாதானம் செய்கிறார்.'இனிப்பான பழங்களை மட்டுமே எனக்கு தர வேண்டும் என்ற பக்தியின் வெளிப்பாடு அவள் செயல்' என்கிறார். கிழவியாகி விட்ட சபரிக்கு ஆசி வழங்குகிறார்.''ராமர் வந்தே தீருவார் என சபரி கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையே இன்று நமக்கு தேவை. நாடு வளர்ச்சி அடைந்தே தீரும் என்று ஒவ்வொரு இந்தியரும் நம்பிக்கை கொள்ள வேண்டும்'' என்றார் மோடி.

குகன்:

வன ராஜ்யத்தின் அரசன். ராமர், சீதா, லட்சுமணன் வனவாசம் செல்ல கங்கை நதியை கடக்க படகு தந்து உதவுகிறார். 14 ஆண்டு முடிந்து நாடு திரும்பும்போது நண்பனை மறக்காமல் தேடி வருகிறார் ராமர்.''ராமருக்கும் குகனுக்கும் இடையே நிலவிய ஆழமான நட்பு நம் மக்களுக்கு இடையிலும் மலர வேண்டும்'' என்றார் பிரதமர்.

அணில்:

இலங்கை செல்ல ராமருக்கு பாலம் கட்ட வானர சேனை ஏற்பாடு செய்தபோது, சிறு கற்களை சுமந்து சென்று உதவிய அணில் கதை பிரசித்தமானது.''நாங்கள் பெரிய பாறைகளை கடலில் போடும்போது நீ சிறு கற்களை போட்டு என்ன பயன்?'' என்று அனுமன் அந்த அணில் மீது கோபித்தபோது ராமர் தலையிட்டார். ''நீங்கள் போடும் பாறைகளின் இடையே உள்ள வெற்றிடத்தை அந்த சிறு கற்களே நிரப்புகின்றன. எவ்வளவு சிறியவர் என்றாலும் அவராலும் சிறப்பாக பங்களிக்க இயலும்,'' என்றார்.இதை சுட்டிக்காட்டிய மோடி, ''நான் சாதாரண மனிதன். என்னால் இந்த நாட்டுக்கு என்ன செய்து விட முடியும் என்ற எண்ணம் எவருக்கும் வரக்கூடாது. எளியோரும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும். எவரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது'' என்றார்.

ஜடாயு:

சீதையை கவர்ந்து சென்ற ராவணனுடன் மோதி கீழே விழுந்து ராமர் கைகளில் உயிரை விட்டது ஜடாயு. ராமரே இறுதி சடங்குகளை செய்தார்.இதுபற்றி பேசிய மோடி, ''அறிவாளியும் வீரனுமான ராவணனை வெல்ல முடியாது என தெரிந்தும் ஜடாயு போரிட்டது. அந்த மனோதிடம் நம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும். நாட்டை பிரமாண்டமாக கட்டமைப்பதில் அது தான் மிகப் பெரிய கருவி,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி