உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கோவையில் விமான சேவை குறைப்பு: தொழில் முனைவோர் பாதிப்பு

கோவையில் விமான சேவை குறைப்பு: தொழில் முனைவோர் பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவையிலிருந்து சென்னை உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்குச் செல்லும் 6 விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், கொங்கு மண்டல தொழில் முனைவோர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.தமிழகத்தில் சென்னை விமான நிலையத்துக்கு அடுத்ததாக, கோவை விமான நிலையம்தான், அதிகளவு விமானங்களையும், பயணிகளையும் கையாண்டு வருகிறது. கடந்த ஆண்டின் துவக்கத்தில், 22 உள் நாட்டு விமானங்களும், இரண்டு வெளிநாட்டு விமானங்களும் இங்கிருந்து இயக்கப்பட்டு வந்தன.ஆண்டுக்கு 20 லட்சம் உள்நாட்டுப் பயணிகள், இரண்டு லட்சம் வெளிநாட்டுப் பயணிகள், கோவை விமான நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும், மாதந்தோறும் உயர்ந்து கொண்டிருக்கிறது.கோவையிலிருந்து நேரடி வெளிநாட்டு விமான சேவை இல்லாததால், இங்கிருந்து டில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட பல நகரங்களுக்குச் சென்று, அங்கிருந்து பலர் வெளிநாடு செல்கின்றனர். இதனால் உள்நாட்டு விமான சேவை, படிப்படியாக உயர்ந்து வந்தது.குறிப்பாக, ஏர் இந்தியா நிறுவனம், கடந்த மே மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில், மும்பைக்கு புதிதாக இரண்டு சேவைகளைத் துவங்கியது.'இண்டிகோ' நிறுவனம், மாலையில் மும்பைக்கு ஒரு விமான சேவையை அளித்தது. இதனால் உள் நாட்டு விமானங்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. இது இந்த ஆண்டில் மேலும் அதிகரிக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக, கடந்த மூன்று மாதங்களில் மட்டும், கோவையிலிருந்து 6 உள்நாட்டு விமான சேவை குறைந்துள்ளது.இவையனைத்துமே, 'இண்டிகோ' நிறுவனத்தின் விமான சேவைகளாகும். இந்த நிறுவனத்தின் விமானங்களின் இன்ஜின்களில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக, இன்ஜின் பற்றாக்குறை ஏற்பட்டு, 30 விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சிவில் ஏவியேஷன் ஜெனரல் (டி.ஜி.சி.ஏ.,) உத்தரவுகளின் அடிப்படையில், மார்ச் மாதத்துக்குள் மேலும் 40 விமானங்கள் நிறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த அக்டோபரிலிருந்து இப்போது வரை, கோவையில் மட்டும் 6 விமான சேவை குறைக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு மூன்று, ஹைதராபாத்திற்கு இரண்டு, பெங்களூருக்கு ஒன்று என மொத்தம் 6 தினசரி விமான சேவையை இந்த நிறுவனம் நிறுத்திக் கொண்டுள்ளது.இதனால், கொங்கு மண்டல தொழில் முனைவோர், கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதற்குத் தீர்வு காணும் வகையில், கோவையிலிருந்து புதிய விமான சேவைகளைத் துவக்க வேண்டுமென்று, கொங்கு குளோபல் போரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், விமான நிறுவனங்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.குறிப்பாக, வெளிநாடு செல்வோருக்கு உதவும் வகையில், டில்லி, மும்பைக்கு அதிக விமானங்களை இயக்குமாறு, ஏர் இந்தியா நிறுவனத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறைந்த கட்டண விமான சேவை வழங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சார்பில், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களுக்கு, விமான சேவையை துவக்க வேண்டுமென்றும் கொங்கு குளோபல் போரம் கடிதம் எழுதியுள்ளது.இந்த கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக, ஏர் இந்தியா தலைமை நிர்வாகி, கேம்ப்பெல் வில்சன், பதில் அனுப்பியுள்ளார். கோவை விமான நிலைய விரிவாக்கம் தாமதம், விமான சேவைகள் குறைப்பால், கோவை விமான நிலையத்தின் வளர்ச்சி தடைபடும் வாய்ப்புள்ளது.கொங்கு மண்டல மக்கள் பிரதிநிதிகள், தொழில் அமைப்பினர் மற்றும் அதிகாரிகள் இணைந்து உடனே தீர்வு காண வேண்டிய விஷயம் இது! -நமது சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ