உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கர்நாடகாவில் ரூ.6 கோடி; இங்கு ரூ.10 லட்சம்: இழப்பீட்டில் விவசாயிகளுக்கு பாரபட்சம்

கர்நாடகாவில் ரூ.6 கோடி; இங்கு ரூ.10 லட்சம்: இழப்பீட்டில் விவசாயிகளுக்கு பாரபட்சம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2.68 லட்சம் ஹெக்டேரில், நெல், ராகி, துவரை, கொள்ளு, நிலக்கடலை, மா, தென்னை, மலர்கள், காய்கறிகள் போன்ற பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.சிப்காட், சாலை போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக, விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. ஓசூரில் ஏற்கனவே சிப்காட் - 1 மற்றும் சிப்காட் - 2 மற்றும் சிட்கோ தொழிற்பேட்டைகள் உள்ளன. இங்கு ஏற்கனவே இடவசதியுள்ள போதும், தமிழக அரசு அதை பயன்படுத்தாமல், ஓசூர் அருகே, சூளகிரி தாலுகாவில் சிப்காட் - 3, சிப்காட் - 4, சிப்காட் - 5 போன்றவற்றை அமைத்து வருகிறது. அதற்காக, 2,000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன.கர்நாடகா, தமிழக எல்லையை இணைக்க அமைக்கப்படும் சாட்டிலைட் டவுன் ரிங்ரோட்டிற்காக, 300 ஹெக்டேருக்கு மேல், விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டு, சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

சிறு விவசாயிகள் பாதிப்பு

பன்னாட்டு விமான நிலையம் அமைக்க, பேலகொண்டப்பள்ளி, கலுகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, முதுகானப்பள்ளி, ஒசபுரம், முகலுார், அச்செட்டிப்பள்ளி ஆகிய ஏழு பஞ்.,க்களில், 2,300 ஏக்கர் நிலத்தை, அரசு கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், விவசாய நிலங்களும் அடக்கம். அதற்கான சர்வே பணி மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.கர்நாடகா மாநிலம், பெங்களூரு நகரைச் சுற்றி, 287 கி.மீ., துாரத்திற்கு ரயில் பாதை அமைக்க இருப்பதாகவும், அதில், தமிழக எல்லையான, ஓசூர் அருகே பாகலுார், கொடியாளம், ஈச்சங்கூர், கொத்தப்பள்ளி. கூஸ்தனப்பள்ளி, சேவகானப்பள்ளி, ஜூஜூவாடி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி, 40 கி.மீ., துாரத்திற்கு ரயில் பாதை செல்வதாகவும் தகவல் பரவி வருகிறது.இதற்கு, தமிழக எல்லையிலுள்ள விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த உள்ளதாக விவசாயிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஓசூர் அவுட்டர் ரிங் ரோட்டிற்கும் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இப்படி, சிப்காட்டுகள், சாலைகள், ரயில்வே லைன், விமான நிலையம் என, ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்துவதால், ஓரிரு ஏக்கரை வைத்து, விவசாயம் செய்து வரும் சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படுவர்.அரசு கையகப்படுத்தும் நிலத்திற்கு கொடுக்கும் இழப்பீட்டு தொகையும் மிக குறைவாக உள்ளது. குறிப்பாக, சாட்டிலைட் டவுன் ரிங்ரோட்டிற்கு, கர்நாடக மாநிலத்தில் ஏக்கருக்கு 1 முதல், 6 கோடி ரூபாய் வரை, ஏரியாவுக்கு தக்கபடி இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், தமிழக எல்லையில், ஏக்கருக்கு அதிகபட்சமாக, 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது. தமிழக அரசும் விவசாய நிலங்களுக்கு சரியான விலையை நிர்ணயிக்கவில்லை. இது விவசாயிகளை அதிருப்தியடையச் செய்துள்ளது.

10 மடங்கு விலை

தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கூறியதாவது: மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு, விவசாய நிலங்களை கையகப்படுத்தினால், சந்தை மதிப்பில், 10 மடங்கு விலை கொடுத்து வாங்கும்படி கூறியது. இறுதியில் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை, ஏழு மடங்கு விலை கொடுக்க முடிவு செய்தது. அதன்பின் வந்த, பா.ஜ., அரசு அதை நடைமுறைப்படுத்தவில்லை.வழிப்பறி செய்வது போல் விவசாய நிலங்களை கையகப்படுத்துகின்றன. தற்போது சந்தை மதிப்பில், 10 மடங்கு விலை கொடுத்தால், விவசாயிகள் நிலத்தைக் கொடுப்பர். அதை மத்திய, மாநில அரசுகள் செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Subash BV
ஜன 22, 2025 18:23

SUITCASES POLITICS WORKING BETTER IN KARNATAKA AND BEST IN TAMIZAGAM. CONGRATS TO STALIN. FARMERS WAKE UP IMMEDIATELY.


ram
ஜன 22, 2025 04:40

மத்திய அரசின் மானியம் சரியாத்தான் கொடுக்குது.. அந்த பணத்தை சரியானபடி விவசாயிகல்கிட்டே போயி சேரமாட்டேங்குது.. யார் ஆட்சி நடக்குது.. திருட்டு கூட்டத்து கையிலே போனா என்ன மிச்சம் வரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை