கோவை : கோவை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக, தி.மு.க.,வைச் சேர்ந்த 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார். இப்பதவியை எதிர்பார்த்த சீனியர் கவுன்சிலர்கள் 'அப்செட்' ஆகினர். மண்டபத்தில் இருந்து வெளியேறிய மண்டல தலைவர் மீனா, காரில் அழுது கொண்டே சென்றார்.கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்த, தி.மு.க.,வைச் சேர்ந்த 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா, பதவியை ராஜினாமா செய்தார். புதிய மேயருக்கான மறைமுக தேர்தல் இன்று நடக்கிறது. மாநகராட்சியில் 100 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில், 73 பேர் தி.மு.க., கவுன்சிலர்கள்; இவர்களில் 33 பேர் பெண்கள். மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், 33 பேரில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அறிவித்தார் நேரு
இப்பதவியை கைப்பற்ற சீனியர் கவுன்சிலர்கள், மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர், இம்முறை தேர்வான கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலரும் முயற்சி செய்தனர். சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளரான, 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகியின் பெயர், எம்.பி., ராஜ்குமார் மூலமாக பரிந்துரைக்கப்பட்டது.இந்நிலையில், மேயர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கும் கூட்டம், கோவை காளப்பட்டி சாலையில் உள்ள மண்டபத்தில் நேற்று நடந்தது. முன்னாள் மேயர் கல்பனா உட்பட சில கவுன்சிலர்கள் கூட்டத்துக்கு வரவில்லை.
கூட்டத்தில் கட்சி தலைமையின் கடிதத்தை, அமைச்சர் நேரு படித்தார். மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டதும், முன்வரிசைக்கு அவரை வரவழைத்து, இருக்கையில் அமர வைத்தனர். ரங்கநாயகிக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். ரங்கநாயகி, 10ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். இவரது கணவர் ராமச்சந்திரன், 29வது வார்டு தி.மு.க., வட்ட செயலர். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
சீனியர்கள் 'அப்செட்'
மேயர் வாய்ப்பு தங்களுக்கு வழங்கப்படும் என காத்திருந்த சீனியர் கவுன்சிலர்கள், ஏமாற்றத்தால் 'அப்செட்' ஆகினர். மத்திய மண்டல தலைவர் மீனா, மேயர் பதவி கிடைக்காத ஏமாற்றத்தில், மண்டபத்தில் இருந்து வெளியே வந்து காரில் ஏறியதும், கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுதார். இதேபோல், பலரும் அதிருப்தியுடன் திரும்பிச் சென்றனர்.
'புதிய மேயராக மீனாவைப் போன்ற கட்சியில் சீனியராக இருப்போரைத் தான் தேர்வு செய்ய வேண்டும் என, மூத்த அமைச்சர்கள் சிலரே கட்சித் தலைமைக்கு எடுத்துக் கூறினர். 'ஆனால், சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஆலோசனைபடியே தேர்வு செய்யலாம் எனக் கூறி, ரங்கநாயகியை தலைமை தேர்வு செய்து விட்டது' என சீனியர் அமைச்சர் ஒருவரே, ரங்கநாயகி தேர்வு குறித்து, மற்ற கவுன்சிலர்களிடம் சொல்லி, அவர்களை சமாதானப்படுத்தி இருக்கிறார்.
புதிய மேயருக்கு 'அட்வைஸ்'
கோவை மாநகராட்சியில் சாலை சீரமைப்பு பணிக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 60 வார்டுகளில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்க, தொட்டி கட்டும் பணி நடந்து வருகிறது. கடந்த முறை மழை பெய்தபோது, வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணி செய்திருக்கிறோம். கோவை மாநகராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறோம்; இன்னும் செய்து தருவோம். அரசு தீட்டும் திட்டங்களை, உள்ளூர் மக்கள் தேவையறிந்து, கவுன்சிலர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என, புதிய மேயருக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.- நேரு, நகராட்சித் துறை அமைச்சர்
அந்த ஒரு 'செட்' உடை!
மேயர் தேர்வுக்கான கூட்டத்துக்கு கவுன்சிலர்கள் வரும்போது, ஒரு 'செட்' உடை எடுத்து வர, கட்சியில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 'பேக்' ஒன்றில் புத்தாடை கொண்டு வந்திருந்தனர். இது தொடர்பாக, தி.மு.க., பெண் கவுன்சிலர்கள் சிலர் கூறுகையில், 'சுற்றுலா அழைத்துச் செல்லப் போவதாகவும், ஒரு செட் துணி எடுத்து வரவும் கூறியிருந்தனர். அதை நம்பி உடை எடுத்து வந்தோம். ஆனால், என்ன நடந்ததோ தெரியாது; சுற்றுலா அழைத்துச் செல்லவில்லை' என்றனர்.