உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / புதிய பதிவு மாவட்டங்களில் சாப்ட்வேர் பிரச்னை: 6 மாதங்களாக பாதிப்பு

புதிய பதிவு மாவட்டங்களில் சாப்ட்வேர் பிரச்னை: 6 மாதங்களாக பாதிப்பு

தமிழகத்தில் புதிய பதிவு மாவட்டங்களில், பல மாதங்களாக 'சாப்ட்வேர்' பிரச்னையால், சொசைட்டி, சிட்ஸ், பங்குதாரர் ஒப்பந்தம் உள்ளிட்டவற்றைப் பதிவு செய்ய முடியாமல், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழக அரசின் பதிவுத்துறையின் 9 மண்டலங்களில் 50 பதிவு மாவட்டங்களின் கீழ், 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன; பதிவுகளின் எண்ணிக்கை மற்றும் வருவாயின் அடிப்படையில், புதிய பதிவு மாவட்டங்கள் பிரிக்கப்படுகின்றன. கடந்த 2022ல் புதிதாக 5 பதிவு மாவட்டங்களும், 2023 ஜூலையில் கோவை தெற்கு, தாம்பரம் ஆகிய புதிய பதிவு மாவட்டங்களும் துவக்கப்பட்டன.கோவை பதிவு மாவட்டத்திலிருந்து, கோவை தெற்கு, கோவை வடக்கு என இரண்டு மாவட்டங்களும், செங்கல்பட்டு பதிவு மாவட்டத்திலிருந்து தாம்பரம் பதிவு மாவட்டமும் பிரிக்கப்பட்டுள்ளன.கோவை தெற்கில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலுார், சிங்காநல்லுார், பீளமேடு, ராஜவீதி ஜாயின்ட் 2 ஆகிய சார்பதிவாளர் அலுவலகங்களும், கோவை வடக்கில் மேட்டுப்பாளையம், அன்னுார், பெரியநாயக்கன்பாளையம், கணபதி, காந்திபுரம், தொண்டாமுத்துார், வடவள்ளி மற்றும் ஜாயின்ட் 1 ஆகிய சார்பதிவாளர் அலுவலகங்களும் இடம் பெற்றுள்ளன.'ஆன்லைன்' முறையில் பல்வேறு பதிவுகளுக்கு விண்ணப்பிப்பதற்கேற்ற வகையில், மென்பொருளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் தான் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாவட்டங்கள் பிரிப்பில் 'மேப்பிங்' ஒத்துப் போகாத காரணத்தால், பங்குதாரர் ஒப்பந்தம், சொசைட்டி, சிட்ஸ் போன்ற எதையும் பதியவோ, புதுப்பிக்கவோ முடியவில்லை.இதற்காக விண்ணப்பிப்பவர்கள், 'ஆன்லைன்' முறையில் சமர்ப்பிக்கும் ஆவணங்களை, மாவட்டப் பதிவாளர்கள் பரிசீலித்து, தேவைப்படின் கள ஆய்வு செய்து, அவற்றைப் பதிவு செய்து, ஒப்புதல் தருவர்.அதற்கான சான்றை, 'ஆன்லைன்' முறையிலேயே விண்ணப்பதாரர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் இப்போது மாவட்டப்பதிவாளர்களால், இவற்றுக்கு ஒப்புதல் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மாவட்டப்பதிவாளர்களால் 'ஆன்லைன்' விண்ணப்பங்களைப் பரிசீலிக்க முடியாதவாறு, அதில் 'கண்டறியமுடியவில்லை' (not found), மீண்டும் முயற்சி செய்யவும் (try again) ஆகிய தகவல்களே வருவதாக பதிவுத்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பிரச்னை, கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருவதால், ஏராளமான பதிவுகள் தடங்கலாகி நிற்கின்றன.இதனால் தொழில் செய்வோர், பொது மக்கள் என பல தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, மென்பொருளைக் கையாளும் டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ் நிறுவனத்துக்கு, பலமுறை முறையீடு செய்தும் சரி செய்யவில்லை என்பது பதிவுத்துறை அலுவலர்களின் குமுறலாகவுள்ளது. இது எப்போது சரி செய்யப்படும் என்ற விபரம் கூட, இவர்களுக்குத் தெரிவதில்லை.இதுகுறித்து கேட்பதற்காக, பதிவுத்துறை தலைவர் பொன்ராஜ் ஆலிவரை தொடர்பு கொண்டபோது, அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. கோவை பதிவுத்துறை மண்டல டி.ஐ.ஜி., சுதா மால்யாவிடம் கேட்டபோது, ''இதுபற்றி ஐ.ஜி., கடந்த வாரம் ஆய்வு செய்து விட்டு, விரைவாகச் சரி செய்யுமாறு அறிவுறுத்திச் சென்றுள்ளார். அதற்கான முயற்சிகள் நடக்கின்றன; எப்போது சரியாகுமென்று தெரியவில்லை.'' என்றார்.மென்பொருள் பிரச்னையை, மாதக்கணக்கில் சரி செய்யாமல் இழுத்தடிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை.-நமது சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Barakat Ali
பிப் 17, 2024 11:48

சாப்ட்வெர் பிரச்னையா இருக்காது ...... சாப்ட்பேப்பர் பிரச்னையா இருக்கும் .....நாட்டுல சிலர் குழந்தையையே கொல்ற மாதிரி தொழில்நுட்பம் லஞ்ச ஊழலுக்கு இடையூறா இருக்கு ......


Kuppan
பிப் 16, 2024 20:43

சாப்ட்வேர் பிரச்னை 6 மாதங்களுக்கு இருக்க முடியாது ஏதோ பெரிய தில்லுமுல்லு நடக்குது, அதை மறைக்க சாப்ட்வேர் மேல் பழி.


Neutrallite
பிப் 16, 2024 17:39

சாப்ட்வேர் பிரச்சினையாவது ஒண்ணாவது...ஆன்லைன்ல எல்லாத்தையும் பண்ணிட்ட்டாங்கன்னா "முக்கியமான பேப்பர்" வராது. அதனால சர்வர் நிறுத்தப்படும், அல்லது தளம் முடக்கப்படும். அப்போது மக்கள் நேரில் வந்து தானே ஆக வேண்டும். இது தான் அல்லக்கைகள் சிலர் கையாளும் சூழ்ச்சி.


RAMAKRISHNAN NATESAN
பிப் 16, 2024 11:25

\\\\ இது குறித்து, மென்பொருளைக் கையாளும் டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ் நிறுவனத்துக்கு, பலமுறை முறையீடு செய்தும் ....... //// அந்த கம்பெனிக்கு பண பாக்கி வெச்சிருப்பீங்க ....... அல்லது அவங்களுக்கு பாக்கி செட்டில் பண்ண சொல்லி யாருகிட்ட கொடுத்தீங்களோ அந்த ஆப்பீசரூ தன்னோட பேருல மியூச்சுவல் பண்டுல போட்டிருப்பார் ......


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
பிப் 16, 2024 10:08

மக்களின் காசை கொடுத்து மென்பொருள் வாங்கியிருக்கிறார்கள் என்றால் அதில் உள்ள பிரச்சனையை மென் பொருள் நிறுவனம் ஏன் சரி செய்யவில்லை. விதிமுறைகளை சரியாக பின்பற்றாத நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க வேண்டும். இதனால் லட்சக்கணக்கான மக்கள் படும் துன்பத்திற்கு யார் பொறுப்பு? பதிவு துறை தலைவர் என்ன நடவடிக்கை எடுத்தார்? அவருக்கு பொறுப்பான முதல்வர் என்ன செய்கிறார்? மக்களின் சேவகர்களாகிய இவர்கள் நமது வரிப்பணத்தை சம்பளமாக பெற்றுக்கொண்டு ஒழுங்காக வேலை செய்வதில்லை. அதனால்தான் இந்த அவல நிலை. நாம் கேள்வி கேட்க வேண்டும். நிறைய மீம்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரப்பி இந்த ஆட்சியாளர்களின் கையாலாகாத நிலையை மக்கள் அறியும்படி செய்ய வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை