சென்னை: தமிழக மின் வாரியத்திற்கு, பல்வேறு திறனில் துணை மின் நிலையங்கள் உள்ளன. அவற்றின் வாயிலாகவே, மின்சாரத்தின் உயரழுத்தம் குறைக்கப்பட்டு, சீராக வினியோகம் செய்யப்படுகிறது.சென்னை உட்பட முக்கிய நகரங்களில், 400, 230 கி.வோ., திறனில் துணை மின் நிலையம் அமைக்க இடம் கிடைப்பதில்லை. எனவே, ஜி.எஸ்.எஸ்., எனப்படும் குறைந்த இடத்தில், அதிக திறனில் செயல்படும் துணை மின் நிலையம் அமைக்கப்படுகிறது. அவை, பி.எச்.இ.எல்., - எல் அண்டு டி போன்ற நிறுவனங்கள் வாயிலாக அமைக்கப்படுகின்றன.ஒரு துணை மின் நிலையத்தில் பழுது, பராமரிப்பு பணிகள் ஏற்படும் போது, அதை எந்த ஒப்பந்த நிறுவனம் அமைத்ததோ, அதே நிறுவனத்தின் வாயிலாக செய்யப்படுகிறது. இதனால், மின் வாரியத்திற்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.இதை தடுக்கும் வகையில், பராமரிப்பு பணிகளை, மின் வாரிய பொறியாளர்களே மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, 1998ல் சென்னை, மயிலாப்பூரில் அமைக்கப்பட்ட, 230 கி.வோ., துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணியை, கடந்த ஒன்பது நாட்களாக, பொறியாளர்களே வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். இதனால், மின் வாரியத்திற்கு, 50 லட்சம் ரூபாய் செலவு மிச்சமாகியுள்ளது.இதையடுத்து, மயிலாப்பூர் துணை மின் நிலையத்திற்கு, மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மின் தொடரமைப்பு கழக மேலாண் இயக்குனர் ராமச்சந்திரன் நேற்று முன்தினம் சென்று, பொறியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.