விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் கணக்கெடுப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சூலுார்:விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் குறித்த கணக்கெடுப்பில், வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் தீவிரமாக கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.தமிழக அரசு சார்பில், விவசாய பாசனத்துக்காக, விவசாயிகளுக்கு, இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுக்க, 23 லட்சத்து, 56 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் உள்ளன. தற்போது, தமிழகத்தில் மொத்த சாகுபடி பரப்பை அதிகரிக்க, புதிதாக, 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2024 - 25 பட்ஜெட்டில், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்துக்கு, 7 ஆயிரத்து, 280 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு விவசாய மின் இணைப்புக்கு இலவச மின்சாரம் வழங்க, ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.இந்நிலையில், இலவச விவசாய மின் இணைப்பை பெற்றுக்கொண்டு, விவசாயம் அல்லாத வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருவது குறித்து புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளன. இதையடுத்து, இப்பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு காணவும், முறைகேடுகளை களைந்து, சரியான தரவுகளை சேகரிக்கவும் வேளாண் துறை முதன்மை செயலாளர் அபூர்வா முடிவு செய்தார். சேமிக்க முடியும்
இலவச மின் இணைப்பு பெற்று, விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்தாத மின் இணைப்புகள் எவ்வளவு உள்ளது என, மாநிலம் முழுக்க கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளார்.விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நோக்கங்களுக்கு பலர் மாற்றி வருகின்றனர். கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் நீண்ட காலமாக செயல்படாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது. விவசாய தேவைகளுக்கு பயன்படுத்தப்படாத மின் இணைப்புகளை கிராமம் வாரியாக கணக்கிட்டால், நீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்படும் உண்மையான இணைப்புகளின் சரியான எண்ணிக்கை கிடைக்கும். அதன்மூலம், சரியான தொகையை தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்துக்கு செலுத்த முடியும். இதனால்,வேளாண் துறையும் குறிப்பிட்ட தொகை சேமிக்க முடியும். கிராமங்கள் வாரியாக கைவிடப்பட்ட கிணறுகள், மற்றும் ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுக்க வேண்டியது அவசியம். வேளாண் மற்றும் தோட்டக் கலைத்துறை அலுவலர்கள் பணியில் ஈடுபட்டு, மாவட்ட வாரியாக அறிக்கை அளிக்க வேண்டும், என, முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம வாரியாக கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. உயர் அதிகாரிகள் நியமனம்:
இலவச மின் இணைப்பு கணக்கெடுக்கும் பணியினை ஆய்வு செய்ய மாவட்டம் வாரியாக வேளாண் துறை உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை, ஈரோடு மாவட்டத்துக்கு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக கமிஷனர் பிரகாஷ் ஆய்வு செய்ய உள்ளார்.
ஒத்துழைப்பு இல்லை
அரசின் கணக்கெடுப்பு காரணமாக இலவச மின் இணைப்பு பெற்று, எந்த ஒரு விவசாயமும் பல ஆண்டுகளாக செய்யாமல், தரிசாக வைத்துள்ள நிலங்களின் உரிமையாளர்கள் அவசர, அவசரமாக நிலத்தில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வேளாண் அலுவலர்களுக்கு சிலர் போதிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை. மின் வாரிய ஊழியர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டால், முழு விபரங்களையும் சேகரிக்க முடியும், என, களத்தில் ஆய்வு செய்யும் அலுவலர்கள் கூறினர்.