உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஐகோர்ட் உத்தரவுப்படி ஏ.டி.ஜி.பி.,யை சீருடையில் ஜீப்பில் அழைத்துச் சென்றது தமிழக போலீஸ்; கைது இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் மறுப்பு

ஐகோர்ட் உத்தரவுப்படி ஏ.டி.ஜி.பி.,யை சீருடையில் ஜீப்பில் அழைத்துச் சென்றது தமிழக போலீஸ்; கைது இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'சிறுவன் கடத்தல் விவகாரத்தில், கூடுதல் டி.ஜி.பி., ஜெயராமை கைது செய்யவில்லை' என, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று விளக்கம் அளித்த நிலையில், 'அவரை பணியிடை நீக்கம் செய்தது ஏன்?' என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு பகுதியில் காதல் ஜோடி திருமணம் செய்த விவகாரத்தில், மணமகனின் சகோதரனான 17 வயது சிறுவனை மணப்பெண்ணின் தந்தை கடத்திய விவகாரம், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில், புதிய பாரதம் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான பூவை ஜெகன்மூர்த்தி, கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.இந்நிலையில், ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், ஏ.டி.ஜி.பி., ஜெயராமை கைது செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. சீருடையுடன் கைது செய்யப்பட்ட ஏ.டி.ஜி.பி., ஜெயராமை போலீசார் விசாரித்தனர். கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஜெயராம் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை, விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏ.டி.ஜி.பி., சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த வழக்கில் போலீஸ் அதிகாரியான ஜெயராம் எந்தவிதமான காரணமும் இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார். 'அவர் இரவு முழுதும் விசாரிக்கப்பட்டு இருக்கிறார். இத்தனைக்கும் அவர் இந்த விவகாரத்தில் எதிர்மனுதாரராக கூட இல்லை. அவரது கைது நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என கோரிக்கை விடுத்தார். தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஏ.டி.ஜி.பி., கைது செய்யப்படவில்லை. அவர் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டு இருக்கிறார்' என்றார். அப்போது பேசிய நீதிபதி உஜ்ஜல் புயான், ''அப்படி என்றால் அவரை ஏன் பணி இடைநீக்கம் செய்தீர்கள்? அவர் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி. அவருக்கு நீங்கள் இதை செய்திருக்கக்கூடாது,'' என்றார். மற்றொரு நீதிபதியான மன்மோகன், ''நான் 18 ஆண்டுகளாக நீதிபதியாக இருக்கிறேன். கைது செய்ய உத்தரவு பிறப்பிப்பதற்கான அதிகாரம் நீதிபதிக்கு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இந்த மாதிரியான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது,'' என்றார். இதையடுத்து, ஏ.டி.ஜி.பி., ஜெயராமின் பணி இடைநீக்கத்தை திரும்ப பெறுவது தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாட்டை உடனடியாக கேட்டு சொல்லும்படி, தமிழக அரசு தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.மூத்த போலீஸ் அதிகாரியான ஏ.டி.ஜி.பி., ஜெயராமை சென்னை உயர் நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்டதும், அவர் சீருடையிலேயே போலீஸ் வாகனத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவங்கள் அனைத்தும் வெளிப்படையாக அரங்கேறிய நிலையில், 'ஜெயராமை கைது செய்யவில்லை' என தமிழக அரசு தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது, குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த சூழலில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்; ஏ.டி.ஜி.பி., ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் ஏ.டி.ஜி.பி.,யை சஸ்பெண்ட் செய்ய மாநில அரசு முடிவு செய்தால் அதில் தலையிட முடியாது. இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.,யிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று தமிழக அரசு தப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றும்படி தலைமை நீதிபதியிடம் அறிவுறுத்துவோம், இவ்வாறு கூறப்பட்டுள்ளது. - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Venkat.M
ஜூன் 21, 2025 19:49

ஒரு திமுக வட்ட செயலாளரை கைது செய்ய முடியாத போலீஸ் ஒரு பத்திரிகையாளர் வீட்டில் மனித மலத்தை கொட்டியவர்களை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்த போலீஸ் ஒரு ஏடிஜிபி யை சீருடையுடன் அழைத்து சென்றது.


Ravichandran G
ஜூன் 21, 2025 15:49

கைது செய்து, விசாரணை செய்யும்,குற்றமாக கருத முடியாது, விசாரணை வளையத்தில் குற்றச்சாட்டு உள்ளது,விசாரணை செய்த பின் குற்றச்சாட்டு நிருபணமான பின் சஸ்பெண்டு உத்தரவு பிறப்பிக்கலாம்.உயரதிகாரிகள் கைது தமிழக அரசுக்கு தலைகுனிவு.


Thomas
ஜூன் 21, 2025 09:14

All are equal before law. No exception for police/ judiciary.


அப்பாவி
ஜூன் 19, 2025 09:40

சீருடையில் அழைத்துச் சென்று கடையில் ஓசி.பரோட்டா, உளுந்து வடை, டீ யெல்லாம் வாங்கிக் குடுத்து கூட்டிட்டுப் போங்க. போலுஸ்னா கைது பண்ணக்கூடாதா? இருங்க. பெரியண்ணன் கிட்டே உங்க உத்தரவையும் ரத்து பண்ணி காட்டுவாங்க.


ஆரூர் ரங்
ஜூன் 19, 2025 09:26

ஜெயராமிடம் எதையோ எதிர்பார்த்து எல்லாம் நடக்கிறதா? தேர்தல் மூலம் திருடர்களிடம் சாவியைக் கொடுத்து விட்டோமா?


சாமானியன்
ஜூன் 19, 2025 08:05

உச்சநீதிமன்றத்திலே எப்போதுமே குழப்பம் தான். கேள்விகளை நன்றாக கேட்பார்கள். பணத்தை பார்த்து மயங்குவார்கள். அப்புறம் தீப்பிடித்தால் குய்யோ முறையோ கதறல். டீவி சிரியல்களை மிஞ்சுகிறதே,


Venukopal, S
ஜூன் 19, 2025 07:34

என்னடா இது...இரும்புக்கரத்திற்கு வந்த சோதனை...


கடலோடி
ஜூன் 19, 2025 07:04

சென்னை ஐகோர்ட் நீதிபதி சொன்ன தீர்ப்பு தானே இந்த போலீஸ் அதிகாரியை கைது செய்யுங்கள் என்று, போலீஸ் சீருடை போட்டு உயர் அதிகாரியாக இருந்தால் தப்பு செய்தால் கைது செய்யக் கூடாதா? சீருடை அணிந்து எந்த தப்பு வேனா செய்யலாமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை