உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கட்டுமான நிறுவனம் திவாலானாலும் வீடு கிடைப்பது இனி சாத்தியமே: விதிகளை திருத்தியது மத்திய அரசு

கட்டுமான நிறுவனம் திவாலானாலும் வீடு கிடைப்பது இனி சாத்தியமே: விதிகளை திருத்தியது மத்திய அரசு

சென்னை: கட்டுமான நிறுவனங்கள் திவாலானாலும், அதில் பணம் செலுத்தியவர்களுக்கு உரிய காலத்தில் வீடு ஒப்படைக்கும் வகையில் சட்ட விதிகள் திருத்தப்பட்டு உள்ளன. நிதி நிர்வாக முறைகேடு காரணமாக, கட்டுமான நிறுவனங்கள் திவாலாகும் போது, அதன் குடியிருப்பு திட்டங்களில், வீடு வாங்க பணம் செலுத்தியவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

நடவடிக்கை

உதாரணமாக, 12 மாதங்களில் வீட்டை ஒப்படைப்பதாக கூறிய நிறுவனம் திவாலானால், அதன் நிதி நிலைமை சீரமைக்கப்பட்டு, மீண்டும் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே, பணம் செலுத்தியவர்களுக்கு வீடு கிடைக்கும். சில இடங்களில் கட்டுமான பணிகள் பாதியில் முடங்கினால், முதலீட்டு தொகையில் ஒரு பகுதி மட்டும் கிடைக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால், வங்கிக்கடன் வாங்கி வீட்டுக்காக முதலீடு செய்தவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. இதை தீர்க்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக, திவால் மற்றும் திவால் நிலை சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இத்திருத்தங்கள், பிப்ரவரி, 4ல் அமலுக்கு வந்துள்ளதாக, திவால் மற்றும் திவால் நிலை வாரியம் தெரிவித்துள்ளது.

திருத்தம் என்ன?

 ஒரு கட்டுமான நிறுவனம் திவாலானால், அதில் வீடு வாங்க முதலீடு செய்தவர்களின் கூட்டத்தை, அதில் சம்பந்தப்பட்ட தொழில்முறை வல்லுனர்கள் நடத்தலாம் திவால் நிலை அறிவிக்கப்பட்டதில் இருந்து, குறுகிய காலத்தில் இதற்கான கூட்டத்தை நடத்தலாம் இந்த கூட்டத்தில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய பிரதிநிதிகளும் பங்கேற்பர்  முதலீட்டாளர்கள் குழு கூட்டத்தில், 66 சதவீத ஓட்டுகள் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் அடிப்படையில், கட்டுமான திட்டங்களில் எஞ்சிய பணிகளை முடித்து, வீட்டை ஒப்படைக்கலாம்  சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிதி ஆதாரங்களை, இதற்கு பயன்படுத்த சட்ட ரீதியாக அனுமதிக்கலாம். இவ்வாறு திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.

பயன் என்ன ?

இந்திய கட்டுமான வல்லுனர்கள் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் அமலுக்கு வந்த பின், கட்டுமான நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் வந்துள்ளன. வீடு வாங்க முன்வரும் மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்தும் போது, ஒவ்வொரு திட்டத்துக்கும் தனி வங்கிக்கடன் துவக்கி, அதில் தான் வரவு - செலவு கணக்கை பார்க்க வேண்டும். இதனால், ஒரு குறிப்பிட்ட திட்டத்துக்கான வங்கிக் கணக்கில் இருந்து, கட்டுமான நிறுவனம் அதிக தொகையை எடுத்து, தவறாக செலவு செய்வது தடுக்கப்படும்.இந்த பின்னணியில், திவால் நிறுவனங்களுக்கான சட்டத்திருத்தம் மக்களுக்கு உரிய காலத்தில் வீடு கிடைப்பதை உறுதி செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை