தமிழக சட்டசபைத் தேர்தலை அணுகுவதற்காக, தி.மு.க., தரப்பில் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக, ஓரணியில் தமிழகம் என்ற பெயரில் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையையும் வேகமாக நடத்தி வருகிறது அக்கட்சி. இதற்காக, வீடு தோறும் செல்லும் தி.மு.க.,வினர், பொதுமக்களிடம் ஆதார் எண் கேட்டு, ஓரணியில் தமிழகத்துக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு செயலி வாயிலாக, பதிவு செய்கின்றனர். பின், சம்பந்தப்பட்ட நபரின் மொபைல் போனுக்கு வரும் ஓ.டி.பி.,யை கேட்டு வாங்கி, அதையும் உள்ளிடு செய்ய, சம்பந்தப்பட்டவர் தி.மு.க.,வில் இணைக்கப்பட்டு விட்டதாக, சம்பந்தப்பட்டவர் மொபைல்போனுக்கு குறுஞ்செய்தி வருகிறது. இந்தப் பணிகளை, தமிழகம் முழுதும் படு வேகமாக தி.மு.க.,வினர் செய்து வர, அ.தி.மு.க., தரப்பில் இதற்கு எதிர் வினையாற்ற முடிவெடுத்தனர். ஆதார் வாயிலாக, ஓ.டி.பி., பெற்று, அதை தி.மு.க., செயலியில் உள்ளிடுவது, தனி மனித புள்ளி விபரங்களை திருடுவதற்கு சமமானது; அதனால், தி.மு.க.,வின் இந்த முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என, அதிகரை அ.தி.மு.க., நிர்வாகி ராஜ்குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணைக்குப் பின், 'தி.மு.க.,வின் ஓரணியில் தமிழகம் திட்டத்துக்காக, பொதுமக்களிடம் இருந்து ஆதார் ஓ.டி.பி., கேட்டு பெறுவது, சட்ட ரீதியில் தவறானது; அதனால், தி.மு.க.,வின் ஓரணியில் தமிழகம் திட்டத்துக்காக ஓ.டி.பி., பெறுவது தடை செய்யப்படுகிறது' என நீதிபதிகள் அறிவித்தனர். இந்நிலையில், இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தி.மு.க., தரப்பு தயாராகி வருகிறது. இந்தத் தகவல், அ.தி.மு.க., தரப்புக்குச் செல்ல, 'தன் தரப்பு கருத்தைக் கேட்காமல், எவ்வித உத்தரவும் போடக் கூடாது' என, உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார் அ.தி.மு.க., நிர்வாகி ராஜ்குமார் -டில்லி சிறப்பு நிருபர் -.