புதுடில்லி,''காங்கிரஸ் கிட்டத்தட்ட, 60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. நாங்கள், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தோம். நாங்கள் செய்த சில திட்டங்களில், ஒரு சில குறைகள் இருக்கலாம். ஆனால், முயற்சிகளில் எந்தத் தவறும் இல்லை, '' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். தேர்தல் பரபரப்பு
லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க பா.ஜ., தீவிரமாக உள்ளது. தேர்தல் பரபரப்புகளுக்கு இடையே, ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்ததும், மிகப் பெரிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்று கூறினேன். ஆனால், அரசியலமைப்பு சட்டத்தை மாற்றப் போவதாக எதிர்க்கட்சிகள் கற்பனையான பொய்யை கூறியுள்ளன. இந்த நாட்டு மக்கள், அவர்களுக்கு சேவை செய்யும், நாட்டுக்கு சேவை செய்யும் மிகப் பெரும் பொறுப்பை கொடுத்துள்ளனர். ஒரு மகனாக, இந்த தாய் நாட்டுக்கு என்னுடைய பணிகளை செய்கிறேன்.வரும், 2047ல் நம் நாடு, 100வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. அந்த தருணத்தில், நம் நாடு, வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். காங்கிரஸ், 60 ஆண்டுகள் வரை ஆட்சியில் இருந்தது. நாங்கள், 10 ஆண்டுகள் இருந்துள்ளோம். இதில், இரண்டு ஆண்டுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும்போது, நாங்கள் செய்த பணிகள் மக்களுக்கு புரியும்.எங்களுடைய பணிகளில் ஒரு சில குறைகள் இருக்கலாம்; அது சரி செய்யப்படும். ஆனால், எங்களுடைய முயற்சிகளில் எந்தக் குறையும் இல்லை. அதனால்தான், இதுவரை செய்தது டிரைலர் என்றும், இனி முழு வேகத்துடன் மக்களின் மிகப் பெரும் எதிர்பார்ப்புகளை, கனவுகளை நிறைவேற்றுவோம் என்று கூறுகிறோம்.நம் நாட்டின் தேர்தல் அரசியலில் வெளிப்படை தன்மையை கொண்டு வரும் நோக்கத்துடனே, தேர்தல் பத்திரங்களை அறிமுகம் செய்தோம். அது ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு அனைவரும் வருத்தமடையும் நிலை ஏற்படும். மீண்டும் கருப்புப் பணம் அரசியலில் நுழைந்துவிடும்.இந்த தேர்தல் பத்திரங்களால் பா.ஜ., தான் மிகப் பெரிய பலன் பெற்றதாக கூறுகின்றனர். தேர்தல்களில் அனைத்துக் கட்சிகளும், பணத்தை செலவிடுகின்றன. அதில் கறுப்புப் பணமும் உண்டு. எங்கள் கட்சியும் செய்தது. இல்லை என்று மறுப்பதற்கில்லை. அதை மாற்றவே தேர்தல் பத்திரத்தை அறிமுகம் செய்தோம்.குறிப்பிட்ட, 16 நிறுவனங்கள், அமலாக்கத் துறை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட பின், தேர்தல் பத்திரங்களை வாங்கி கட்சிகளுக்கு கொடுத்ததாக கூறுகின்றனர். அதில், 37 சதவீதம் பா.ஜ.,வுக்கு கிடைத்ததாக கூறுகின்றனர். அதே நேரத்தில், 63 சதவீதம் எதிர்க்கட்சிகளுக்கு சென்றுள்ளதை சுலபமாக மறந்து விடுகின்றனர். நன்கொடை
இதுபோன்று யாருக்கு எவ்வளவு நன்கொடை கிடைத்தது என்பது தற்போது தெரியவந்துள்ளதுதான், தேர்தல் பத்திரத்தின் வெற்றி. இதுவரை இதற்கான கணக்கை கட்சிகள் காட்டியதில்லை. சி.பி.ஐ., அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை, எதிர்க்கட்சிகளை ஒடுக்க பயன்படுத்தப்படுவதாக கூறுகின்றனர். ஆனால், அந்த அமைப்புகள் விசாரிக்கும் வழக்குகளில், எதிர்க்கட்சியினர் மீதான வழக்குகள், 3 சதவீதமே. செய்த பாவத்தின் பலன்களை அவர்கள் அனுபவிக்கின்றனர். நேர்மையானவர்கள் பயப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.'தி.மு.க., மீது மக்கள் கோபம்'
தமிழக அரசியல் நிலவரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பிரதமர் மோடி அளித்த பதில்:தமிழகத்தில், கடந்த ஐந்து தலைமுறைகளாக பா.ஜ., பணியாற்றி வருகிறது. எனவே தொடர்ச்சியான செயல்பாடுகள் இருந்து வருகின்றன. காங்கிரஸ் மீது தமிழக மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதும், மாநில கட்சிகள் பக்கம் சென்றனர். அந்த கட்சிகள் மீதும் தற்போது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.இந்த நேரத்தில், மற்ற மாநிலங்களில் நடக்கும் பா.ஜ., மாடல் ஆட்சியை தமிழக மக்கள் கவனிக்க துவங்கினர். மற்ற மாநிலங்களில் வாழும் தமிழக மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் போது வெளிமாநிலங்களின் வளர்ச்சி குறித்து விவரிக்கின்றனர். இதனால், தமிழகத்தை மற்ற மாநிலங்களுடன் மக்கள் ஒப்பிட துவங்கினர்.தி.மு.க.,வினர் எங்களை பானிபூரி வாலாக்கள் என கிண்டலடிப்பது வழக்கம். தமிழக மக்கள் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக வந்தபோது, அதன் வளர்ச்சியை பார்த்து திகைத்தனர். நாங்கள் கேள்விப்பட்டதற்கும், இங்குள்ள வளர்ச்சிக்கும் சம்பந்தமில்லை என வியந்தனர்.இதன் காரணமாக தான், தி.மு.க., மீது மக்களுக்கு கோபம் அதிகரித்தது. அந்த கோபம் பா.ஜ.,வுக்கு சாதகமாக திரும்பி உள்ளது. அண்ணாமலை மிக சிறந்த தலைவர்; நல்ல பேச்சாளர்; துடிப்பான இளைஞர். ஐ.பி.எஸ்., அதிகாரி பணியை விட்டுவிட்டு பா.ஜ.,வில் இணைந்தார். அவர் தி.மு.க.,வில் இணைந்திருந்தால் மிகப் பெரிய தலைவராகி இருப்பார்.ஆனால், அவர் அங்கு செல்லாமல் பா.ஜ.,வுக்கு வந்தார். பா.ஜ., மீதான நம்பிக்கையில் தான், அவர் அந்த கட்சியில் இணைந்தார் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இது, பா.ஜ.,வின் மீதான ஈர்ப்பை அதிகரித்துள்ளது. சனாதன தர்மத்துக்கு எதிராக தி.மு.க., தொடர்ந்து பேசி வருவது குறித்து நீங்கள் காங்கிரஸ் கட்சியிடம் தான் கேட்க வேண்டும். மஹாத்மா காந்தியின் பெயருடன் தொடர்புடைய காங்கிரஸ், எப்போதும் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்த இந்திராவின் காங்கிரஸ் கட்சியினரிடம் தான் இதை நீங்கள் கேட்க வேண்டும்.சனாதனத்துக்கு எதிரானவர்களுடன் நீங்கள் ஏன் சேர்ந்துள்ளீர்கள்? இதில் உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.சனாதனத்துக்கு எதிரான வெறுப்புஉணர்வால் தி.மு.க., பிறந்தது. எனவே, அவர்களிடம் இந்த கேள்வியை கேட்பது பொருந்தாது. காங்கிரஸ் உண்மையான குணத்தை இழந்துவிட்டது.இந்தியா பன்முகத்தன்மை நிறைந்த நாடு. இங்கு பாலைவனம் உள்ளது, கடல் உள்ளது, இமய மலை உள்ளது, கங்கை - காவிரி உள்ளது. எனவே, இந்தியாவை துண்டு துண்டாக பார்ப்பதே தவறான பார்வை. இதே இந்தியாவில் ராமர் பெயருடன் தொடர்புடைய ஊர் தமிழகத்தில் தான் உள்ளது. பல சிறிய கிராமங்கள் ராமரின் பெயரை தாங்கி உள்ளன. இதை எப்படி பிரித்து பார்ப்பது.ஒரு மனிதர் முதன்முறையாக ஐ.நா., சபைக்கு சென்று உரையாற்றுகிறார். அங்கு உலகின் பழமையான மொழியான தமிழை பற்றி உயர்வாக பேசுகிறார். அந்த மனிதரை எந்த அடிப்படையில் நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்பது புரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.