உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மதுரையில் நாளை த.வெ.க., பிரமாண்ட மாநாடு; 5 லட்சம் பேர் அமரும் வகையில் ஏற்பாடுகள்

மதுரையில் நாளை த.வெ.க., பிரமாண்ட மாநாடு; 5 லட்சம் பேர் அமரும் வகையில் ஏற்பாடுகள்

மதுரை: மதுரை பாரபத்தியில் நாளை (ஆக.,21) நடக்க உள்ள த.வெ.க., 2வது மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேச உள்ளதை ஒட்டி, மேடை ஏற்பாடுகளை பார்வையிட இன்று (ஆக., 20) வருகிறார். மதுரை - துாத்துக்குடி நெடுஞ்சாலையில் பாரபத்தியில் 500 ஏக்கர் பரப்பளவிலான காலியிடத்தில் 5 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமாக மாநாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெடுஞ்சாலையின் இருபுறமும் கட்சிக் கொடிகள் நடப்பட்டுள்ளன. மாநாட்டின் நுழைவு வாயிலில் கட்சிக்கொடிகளுடன் பந்தலின் தடுப்புகளும் சிவப்பு, மஞ்சள் துணியில் தைக்கப்பட்டு போர்த்தப்பட்டுள்ளது. மேடையில் இருந்து அரைகிலோ மீட்டர் துாரம் வரை தொண்டர்கள் அமரும் வகையில் இருபுறமும் தனித்தனி தடுப்புகளுடன் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பு பகுதியிலும் குறைந்தது 2000 பேர் அமர முடியும். இதற்காக லட்சக்கணக்கான பிளாஸ்டிக் சேர்கள் லாரிகளில் வந்திறங்கியது. மாநாட்டின் முழு நீளத்திற்கும் தனித்தனி தடுப்புகள் அமைத்து ஒவ்வொரு தடுப்பிலும் பிரமாண்டமான 'எல்.இ.டி.,' டிவிக்கள் பொருத்தப்பட்டு விஜய் பேசுவதையும் நடந்து செல்வதையும் நேரலையில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்ட மொபைல் கழிப்பறைகள் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு லட்சம் எண்ணிக்கையிலான அரைலிட்டர் மினரல் வாட்டர் பாட்டில்கள் கொண்டு வரப்பட்டாலும், தொண்டர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் கூடுதலாக ஒவ்வொரு தடுப்பு பகுதியை ஒட்டியும் 1000 லிட்டர் அளவுள்ள குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டு தரைவழியே குழாய் பதிக்கப்பட்டு தொண்டர்கள் உட்காரும் இடத்தருகே தலா நான்கு குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. 400 மீட்டர் நீளத்திற்கு இரும்பு மேடை பந்தலின் துவக்கம் முதல் இறுதிவரையான முழு நீளத்திற்கும் செம்மண் தரையில் பச்சைக்கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. மேடையில் இருந்து 'ராம்ப் வாக்' மேடை வரை கட்சித்தலைவர் விஜய் நடந்து வந்து தொண்டர்களை பார்த்து கையசைப்பதற்கு வசதியாக 400 மீட்டர் நீளத்திற்கு பிரமாண்ட இரும்பு மேடை அமைக்கப்பட்டுள்ளது. விஜய் நடந்து வரும் போது தொண்டர்கள், அருகே செல்ல முடியாத வகையில் 15 அடி அகலத்தில் மூன்றடுக்கில் அடுத்தடுத்து இரும்புக்கம்பி பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. விஜய் மேடையில் நடந்து வரும் போது முதல் அடுக்கில் பாதுகாப்பு 'பவுன்சர்கள்', 2வது அடுக்கில் போலீசார் பாதுகாப்பு என உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜய் நடந்து செல்வதை அனைவரும் காணும் வகையில் 'ராம்ப் வாக்' மேடையின் இருபுறமும் தலா 32 பல்புகளுடன் கூடிய 40 க்கும் மேற்பட்ட 'போகஸ்' விளக்குகள் தரையில் ஊன்றப்பட்டுள்ளன. மாநாடு முழுவதுக்கும் மின்னொளி வசதி செய்யப்பட்டுள்ளது. மேடையின் இருபுறமும் தலா 15 முதலுதவி மையங்களுக்காக தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் 20 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு தடையற்ற மின்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மேடையின் பின்பகுதியில் வி.ஐ.பி.,க்களுக்காக தனித்தனி ஏசி குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. விஜய் மற்றும் நிர்வாகிகள் பயன்படுத்த, 5 'கேரவன்கள்' நாளை (ஆக.,21) கொண்டு வரப்படும். பொதுமக்கள் வாகனங்கள், வி.ஐ.பி.,க்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு என மூன்று இடங்களில் 'பார்க்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது. மேடையின் முகப்பில் இரு யானைகள் தும்பிக்கையை துாக்கியபடி நிற்பது போல கட்அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் உட்காரும் இடத்தில் பச்சைக்கம்பளமும் வி.ஐ.பி.,க்களுக்காக சிவப்பு கம்பளமும் விரிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கான வசதிகள் தயாரான நிலையில் மேடை அமைப்புக்கான இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. இன்று (ஆக.,20) மாநாட்டு பந்தலை பார்வையிட விஜய் வருவார் என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., நடுவில் விஜய்

மதுரை த.வெ.க., மாநாட்டு திடலில் தமிழக வரைபடத்தின் இடது, வலது பக்கத்தில் மறைந்த முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆருக்கு நடுவில் கட்சித் தலைவர் விஜய் இரு கைகளை நீட்டியது போன்ற கட்அவுட், மேடையின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணாதுரை (1967), எம்.ஜி.ஆரை (1977) போன்று 2026 ல் விஜய், முதல்வராக ஆட்சியைப் பிடிப்பார் என்பதைக் குறிக்கும் வகையில் 'வரலாறு திரும்புகிறது' என்ற வாசகங்களுடன் கட் அவுட் உள்ளது. அதன் கீழே விஜய் கூறுவது போல 'உங்கள் விஜய் நா வர்றேன்' என குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சோலை பார்த்தி
ஆக 20, 2025 22:35

நூரடி உயர கொடி மரம் விழுந்து ஒரு கார் போயே போச்சு அப்புறம் யார் யார சாய்க்க போறாங்களோ...


vivek
ஆக 20, 2025 13:22

இதயம் பத்திரம்


Anonymous
ஆக 20, 2025 12:19

மாநாடு முடிஞ்ச பிறகு, அந்த இடத்தை சுத்தம் செய்வார்களா?மதுரை நாற போகுதுன்னு கவலையா இருக்கு.


ராமகிருஷ்ணன்
ஆக 20, 2025 11:43

மெஷினரிகளின் பணம் புகுந்து விளையாடுகிறது. தமிழகத்தில் திராவிஷ கும்பல்கள் அடிக்கும் கொள்ளைகள் போதாதா, திவிரவாத கிறிஸ்தவ அமைப்புகள் கொள்ளை அடிக்க களமிறங்கி விட்டனர். தமிழக மக்கள் மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்கள். எச்சரிக்கை, ஆபத்து.


Padmasridharan
ஆக 20, 2025 07:59

வரலாறு திரும்பட்டும், புவியியல் மாறட்டும், விலங்கியல் ஒளியட்டும், ஒழிந்துள்ள பொருளியல் வெளியில் வரட்டும்.. எந்தக்குடி எந்தக்குடியை கெடுத்திருக்கின்றதை 2026 வெளிச்சத்தில் தெரியட்டும், இலவசப் பயணங்களால் மக்களின் வோட்டை வாங்காமல் குறைந்தபட்ச உணவகங்களில் தரம் அதிகரிக்கட்டும், பணத்தை கொடுத்து குடிக்கும் நீரை வாங்கும் அவலம் மறையட்டும்.. லஞ்சம் கேட்கும் அரசதிகார பிச்சைக்காரர்களின் இடத்தை நேர்மையானவர்கள் விஜயம் செய்யட்டும்


தொளபதி
ஆக 20, 2025 09:17

தனது முந்தைய தொழிலான சினிமாவில் செயற்கையாக தன்னை முன்னிறுத்திக் கொள்ள நேர்மையற்ற உத்திகளை கையாண்ட, இது வரை பெரிதாக எந்த நற்பண்புகளையோ, திறமைகளையோ வெளிப்படுத்தாமல் அரசியலில் காலூன்ற நினைக்கும் பேராசை கொண்ட ஜோசஃப் விஜய் போன்றவர்களுக்கு ஆரம்பத்திலேயே நல்ல பதிலடி கொடுக்கக்கூடிய தெளிவு மக்களுக்கு வரட்டும்.


சமீபத்திய செய்தி