உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டோக்கன் வாங்கியவர்கள் பத்திரப்பதிவுக்கு வராதது ஏன்? விசாரணைக்கு பதிவுத்துறை உத்தரவு

டோக்கன் வாங்கியவர்கள் பத்திரப்பதிவுக்கு வராதது ஏன்? விசாரணைக்கு பதிவுத்துறை உத்தரவு

சென்னை : சொத்து பத்திரங்களை பதிவு செய்ய, 'டோக்கன்' வாங்கியவர்களில் பெரும்பாலானோர் பதிவுக்கு வராதது குறித்து விசாரித்து பதில் அளிக்குமாறு, பதிவுத்துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் வீடு, மனைகள் வாங்குவோர், அதுதொடர்பான பத்திரங்களை, சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில், சொத்து குறித்தும், விற்பவர், வாங்குபவர் குறித்த விபரங்களும், பதிவுத்துறை இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். இத்தகவல்கள் மீதான முதல்கட்ட ஆய்வுக்கு பின், கட்டணங்கள் தெரிவிக்கப்படும். கட்டணங்களை செலுத்தியவுடன், பதிவுக்கு பத்திரங்களை தாக்கல் செய்வதற்கான நாள், நேரத்தை ஒதுக்கி, 'டோக்கன்' வழங்கப்படும். அதிக பத்திரங்கள் வரும் அலுவலகங்களில், தினசரி, 200 டோக்கன்களும், மற்ற அலுவலகங்களில், 100 டோக்கன்களும் வழங்கப்படும். டோக்கன் பெற்றவர்களில் பெரும்பாலானோர், அதை பயன்படுத்தவில்லை என்பது, பதிவுத்துறை தலைமையக அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகம் முழுதும் மண்டல வாரியாக, குறிப்பிட்ட சில சார் பதிவாளர் அலுவலகங்களில் பெறப்பட்ட டோக்கன்களின் எண்ணிக்கை, பதிவான பத்திரங்கள் எண்ணிக்கை குறித்து, ஆய்வு செய்யப்பட்டது. ஒரு அலுவலகத்தில், 60 டோக்கன்கள் பெறப்பட்ட நிலையில், 45 டோக்கன்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதில், பயன்படுத்தாத மீதி டோக்கன்கள் தொடர்பான பத்திரங்கள் தாக்கலாகவில்லை என, சார் பதிவாளர்கள் குறிப்பு அனுப்பி உள்ளனர். ஆனால், பொது மக்களிடம் இருந்து வந்த தகவல்கள்படி, பத்திரங்களில் சிறிய அளவிலான குறைபாடுகள் இருந்ததால், அதை சார் பதிவாளர்கள் திருப்பி அனுப்பியது தெரியவந்தது. சிறிய அளவிலான குறைபாடுகள் இருந்தாலும், அதை பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சார் பதிவாளர்கள் இவ்வாறு செயல்படுவது சரியல்ல. எனவே, இதுபோன்ற பயன்படுத்தப்படாத டோக்கன்கள் தொடர்பான நபர்களை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதிவுக்கு வராதது குறித்து காரணம் கேட்டு, அதை தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். தினசரி பயன்படுத்தாத டோக்கன்கள் குறித்த விசாரணை மேற்கொள்ள, சார் பதிவாளர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

GMM
பிப் 04, 2025 14:02

சிறிய அளவில் குறைபாடு இருந்தாலும் சட்ட சிக்கல் வரும். வழக்கில் சிக்கினால், சொத்து யாருக்கு எப்போது பயன் தரும் என்று அறிய முடியாது. பத்திர பதிவின் போது விற்பவர் முன் பத்திர முக்கிய விவரம், வீட்டு வரி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு , பட்டா மாறுதல் விவரம் தேவை. மேலும் வங்கி பரிவர்த்தனை இல்லாத பவர், ஒத்தி , கடன், கிரய பத்திரம் பெரும்பாலும் மோசடி பதிவுகள். ஒரே உத்தரவில் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். அரசுக்கு வருவாய் என்ற போர்வையில் மோசடி பதிவுகள் ஏராளம். வழக்கை ஆயுளுக்கும் தீர்க்க முடியாது. சொத்தை வழக்கில் வாங்கியவர், அல்லது வக்கீல், நீதிபதிக்கு, எழுதிக்கொடுத்தால் தான் நமக்கு நிம்மதி. இல்லாவிட்டால் திறந்தவெளி சிறை போன்று வாழ்வு மாறும்.


S. Neelakanta Pillai
பிப் 04, 2025 11:14

அரசின் அக்கறை மெய்சிலிர்க்க வைக்கிறது. முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பும் புகார்கள் முறையாக பரிசீலிக்கப் படுவதில்லை தீர்வு காணப்படுவதில்லை என்பதை பற்றி முதலமைச்சர் அக்கறை கொள்ளவில்லை. அதை விசாரணை செய்வதற்கு எந்தவித விசாரணை அமைப்புக்கும் உத்தரவிடவில்லை மாறாக அதிக வருமானம் வர வேண்டும் அப்போதுதான் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்க முடியும் என்பதற்காக குறிப்பிட்ட வருமானம் வரும் துறைகளாக பார்த்து அக்கறை செலுத்துவது அல்பத்தனம்.


Perumal Pillai
பிப் 04, 2025 10:15

திருநெல்வேலி ஜில்லா பணகுடி சப் ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ் ஒரு லஞ்ச கூடாரம் ஆக ஆகி விட்டது. அந்த சப் ரெஜிஸ்ட்ரார் ய் அர்ரெஸ்ட் செய்ய அரசாங்கம் முன் வரவேண்டும்.


K.Thangarajan
பிப் 04, 2025 13:14

கையும் களவுமாகப் பிடித்தாலும் இடமாற்றம் மட்டுமே தண்டணை.


rama adhavan
பிப் 04, 2025 09:01

போன் கால்களை ரெகார்ட் செய்தும் யாருடன் பேசுகிறார்கள் என்ற விவரத்தையும் சேர்த்து அனுப்ப வேண்டும். அந்த விபரங்களை சம்பந்தப்பட்ட காவல்துறை கண்ட்ரோல் ரூமுக்கும் நேரடியாக தெரிவிக்கும் வகையில் இருக்க வேண்டும். லஞ்ச ஒழிப்பு காவல்துறையும் நேர்மையாக விசாரணை நடத்தி அறிக்கையை பதிவுத் துறைக்கு 2 நாட்களில் அனுப்ப வேண்டும்.


chennai sivakumar
பிப் 04, 2025 08:07

இதில் என்ன ஆச்சரியம். ரேட் படிந்து இருக்காது. அவ்வளவுதான்


VENKATASUBRAMANIAN
பிப் 04, 2025 07:45

ஊழலின் மொத்த உருவமே பத்திரப்பதிவு துறைதான். அங்கு லஞ்சம் வாங்காமல் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள்.எல்லாம் சரியாக இருந்தாலும் எதையாவது ஒரு காரணம் கூறுவார்கள். இதனால்தான் பொதுமக்களும் வேறு வழியின்றி காசு கொடுக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு குடும்பம் என்று ஒன்று உள்ளது. அதை அவர்கள் நினைத்தால் இதை செய்ய மாட்டார்கள். இதன் விளைவு அவர்களின் அடுத்த தலைமுறையை பாதிக்கும். இதுதான் அவர்களின் வாரிசுகளுக்கு விட்டு செல்கிறார்கள். மனசாட்சி உள்ளவர் சிந்திக்க வேண்டும்.


Kasimani Baskaran
பிப் 04, 2025 06:24

புது வகை ஏமாற்று வேலை..


D.Ambujavalli
பிப் 04, 2025 06:15

‘வர வேண்டியதில்’ சுணக்கம் அதனால் பதிவு செய்யவில்லை என்று உண்மையை சொல்லிவிடப்போகிறார்களா என்ன ?


Mani . V
பிப் 04, 2025 05:54

லஞ்சம் வரவில்லை என்ற கவலைதானே உங்களுக்கு?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை