திருநள்ளாரில் சனிப் பெயர்ச்சி விழா ஏற்பாடுகளை கவனிக்க சிறப்புக் குழுவை
அரசு அமைத்துள்ளது. காரைக்கால் திருநள்ளாரில் தர்பாரண்யேஸ்வரர் கோவில்
அமைந்துள்ளது. இங்கு சனி பகவான் தனி சன்னதி கொண்டுள்ளார். நவகிரகங்களில்
சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் கோவில் விளங்குகிறது. இங்கு நடக்கும்
சனிப் பெயர்ச்சி விழா பிரசித்திப் பெற்றதாகும். சனி பெயர்ச்சி நடக்கும்
தினத்தில் நாடு முழுவதும் இருந்தும், உலகத்தின் பல நாடுகளில் இருந்தும்
லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாருக்கு வருவது வழக்கம். சனிப்
பெயர்ச்சியன்று மட்டுமல்லாமல், சனிப் பெயர்ச்சிக்கு ஒரு மாதத்துக்கு
முன்பிருந்தே பக்தர்கள் வருகை துவங்கி விடும். அதுபோல சனிப் பெயர்ச்சி
முடிந்து ஒரு மாதத்துக்கும் மேலாக பக்தர்கள் வந்தவாறு இருப்பர். கடைசியாக,
2009ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதியன்று, சனிப் பெயர்ச்சி விழா நடந்தது.
அப்போது, ஒரே நாளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருநள்ளாரில்
குவிந்தனர். மேலும், கடந்த சனிப் பெயர்ச்சிக்கு முன்பும், பின்பும் வந்த
பக்தர்களின் எண்ணிக்கையும் 5 லட்சத்தையும் தாண்டியது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சூழ்நிலையில், வரும் டிசம்பர் 21ம் தேதியன்று காலை 7.51 மணிக்கு
கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார்.
எனவே, சனிப் பெயர்ச்சி விழாவிற்கான ஆயத்தப் பணிகளை அரசு துவக்கி விட்டது.
சனிப் பெயர்ச்சி விழா ஏற்பாடுகளை முடுக்கி விடுவதற்காக சிறப்புக் குழுவை
அரசு அமைத்துள்ளது. இந்த குழுவின் தலைவராக வேளாண் அமைச்சர் சந்திரகாசு,
துணைத் தலைவராக காரைக்கால் கலெக்டர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எம்.எல்.ஏ.,க்கள் வி.எம்.சி. சிவக்குமார், நாஜிம், பி.ஆர். சிவா,
திருமுருகன், திருநள் ளாறு தேவஸ்தானம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான்,
காரைக்கால் சீனியர் எஸ்.பி., பொதுப்பணி, வருவாய், மின்சாரம், திட்டம்
மற்றும் ஆராய்ச்சி, சிவில் சப்ளை, சுகாதாரம், போக்குவரத்து, உள்ளாட்சி
உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் குழுவின் உறுப்பினர்களாக
நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்,
பி.எஸ்.என்.எல்., ரேடியோ, தூர்தர்ஷன் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவன
அதிகாரிகளும் உறுப்பினர்களாக இருப்பர். இருபத்து மூன்று பேரை கொண்டு இந்த
மெகா கமிட்டியின் உறுப்பினர் செயலராக தர்பாரண்யேஸ்வரர் கோவில் செயல்
அதிகாரி செயல்படுவார். இந்த சிறப்புக் குழுவின் முதல் கூட்டம் நாளை
நடக்கிறது. கூட்டத்தில், சனிப் பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்து விரிவாக
விவாதிக்கப்படுகிறது. விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான
தங்குமிடம், கழிப்பிடம் போன்ற அடிப்படையான வசதிகளை ஏற்படுத்தி தருவது
குறித்தும், போக்குவரத்து, வாகன நிறுத்துமிடம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட
உள்ளது. திருநள்ளார் வரும் பக்தர்கள் அனைவரும் சிரமமின்றி சாமி தரிசனம்
செய்வதற்காக விரிவான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட உள்ளது.-நமது சிறப்பு நிருபர்-