| ADDED : ஜூன் 10, 2024 06:58 AM
வில்லியனுார் : வில்லியனுார் அருகே பைக் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் அன்னை சுப்புலட்சுமி நகரை சேர்ந்த மோகன்,50; கூலி தொழிலாளி . நேற்று மதியம் 2:00 மணியளவில் வீட்டில் இருந்து அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் முருகன் பைக்கில் பத்துக்கண்ணு நோக்கி சென்றனர். அப்போது கூடப்பாக்கத்தில் இருந்து பத்துக்கண்ணு மெயின் ரோட்டில் ஏறியபோது, வில்லியனுார் பகுதியில் இருந்து வந்த பெட்ரோல் ஏற்றிவந்தடேங்கர் லாரி, முருகன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது.இதில் நிலை தடுமாறி மோகன் வலது பக்கமாகவும், முருகன் இடது பக்கமாகவும் விழுந்தனர். இதில் மோகன் டேங்கர் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். வலது பக்கமாக விழுந்த முருகன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார்.உடன் அருகில் இருந்தவர்கள் வில்லியனுார் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் அழகானந்தம் மற்றும் போலீசார் படுகாயமடைந்த முருகனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மோகன் உடலை மீட்டு கதிர்கமாம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் லாரி டிரைவரை கைது செய்து, விசாரித்தனர். இதில் அவர் சீர்காழி பகுதியை சேர்ந்த அழகப்பன் மகன் சுரேஷ் என தெரியவந்தது. மேலும் காலியான பெட்ரோல் டேங்கர் லாரியை பறிமுதல் செய்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்த மோகனுக்கு புஷ்பா என்ற மனைவியும், இரு மகள்கள் உள்ளனர்.