| ADDED : ஜூலை 07, 2024 03:30 AM
புதுச்சத்திரம்: புதுசத்திரத்தில், பஞ்சராகி நின்றிருந்த டிப்பர் லாரி மீது, டெம்போ மோதிய விபத்தில், 2 வாலிபர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.காரைக்கால் அடுத்த சேமியான்குளம் பகுதியை சேர்ந்தவர் அன்வர் மகன் சையத்முகமது, 25; டிரைவர். காரைக்கால் மீராப்பள்ளி தோட்டத்தை சேர்ந்தவர் மஜீத் மகன் முகமது ரியாஸ், 20; கிளீனர்.இருவரும் நேற்று முன்தினம் இரவு டெம்போவில், காரைக்காலில் இருந்து சென்னையில் உள்ள தனியார் கம்பெனிக்கு, கோழி கழிவுகளை ஏற்றிச் சென்றனர்.திண்டிவனம் அருகே சென்றபோது, தனியார் கம்பெனியில் இருந்து போன் மூலம், 'நேரமாகி விட்டது, கோழி கழிவுகளை எடுத்துவர வேண்டாம், காரைக்காலுக்கே செல்லுங்கள்' என தெரிவித்துள்ளனர். அதனால், திண்டிவனத்திலிருந்து காரைக்கால் திரும்பினர். நேற்று அதிகாலை 5:00 மணியளவில் புதுச்சத்திரம் மேம்பாலத்தில் வந்தபோது, பஞ்சராகி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரி மீது டெம்போ மோதி விபத்துக்குள்ளானது.இதில் டெம்போவின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. விபத்தில் உடல் நசுங்கி சையத்முகமது, முகமது ரியாஸ் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, உடல்களைக் கைப்பற்றி கடலுார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் டெம்போவில் ஏற்றி வந்த கோழி கழிவுகள் சாலையில் சிதறியதால் அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசியது. காலை 7:20 மணியளவில் இறந்தவர்களின் உடல்களை அகற்றிய பின், அப்பகுதியை துப்புரவு தொழிலாளர்கள் மூலம் கோழி கழிவுகள் அகற்றும் பணி நடந்தது.