புதுச்சேரி: திண்டுக்கல் பகுதியை சேர்ந்த, ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் புதுச்சேரி தனியார் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திண்டுக்கல், கொத்தனார் முதல் சந்து பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர், 60; நகை செய்யும் தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி, 55; மகன் சுதர்சன்,25; மற்றும் மகள் சவுந்தர்யா, 23; ஆகியோருடன் கடந்த, 7ம் தேதி இரவு, புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார்.நகரப்பகுதியான முத்து மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள பினிக்ஸ் ரெசிடென்சியில் ஒரு நாளுக்கு மட்டும் எனக்கூறி, அறையை 'புக்' செய்து தங்கினார். நேற்று முன்தினம் அவர்கள் அறையை காலி செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், புதுச்சேரியில் பெய்த மழை காரணமாக, விடுதியை விட்டு வெளியேறவில்லை. அந்த விடுதியில் கூடுதலாக ஒரு நாள் தங்குவதற்கான, அனுமதியை நீட்டித்து கொண்டார்.நேற்று 'செக் அவுட்' செய்வதற்கான நேரம் முடிவடைந்த நிலையில், மதியம் 12:30 மணிக்கு விடுதி ஊழியர்கள், அவரது அறைக்கதவை தட்டினர். நீண்ட நேரமாக அவர் குடும்பத்தினருடன் தங்கியிருந்த அறைக்கதவு திறக்கப்படவில்லை.சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் விடுதி கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்த போது, அந்த அறையில், சந்திரசேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட, 4 பேரும் இறந்து கிடந்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த, போலீஸ் ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா மற்றும் சீனியர் எஸ்.பி.,க்கள் நாரா சைதன்யா, கலைவாணன் தலைமையிலான போலீசார், இறந்த சடலங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.முதல்கட்ட விசாரணையில், நால்வரும், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இறந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோரை வரவழைத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட் ஏன்?
போலீசார் நேற்று மதியம் 2:00 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை துவக்கினர்.ஆனால், இரவு 7:30 மணி வரை, இறந்த நான்கு பேரின் சடலங்களும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.அதுவரை, தனியார்விடுதியிலேயே, சடலங்கள் கிடத்தி வைக்கப்பட்டிருந்தன. போலீசார் வந்து, ஐந்தரைமணி நேரம் ஆகியும், சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்படாததன் காரணம் தெரியவில்லை.
மர்மாக உள்ளது
இறந்த நால்வரும், எதை சாப்பிட்டு உயிரிழந்தனர் என்று தெரியவில்லை. தனியார் விடுதியில், சந்திரசேகர், குடும்பத்தினருடன் தங்கியிருந்த அறையில் சில ஆவணங்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். நான்கு பேரும் ஒரே நேரத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்களா என்று தெரியவில்லை. இறப்பிற்கான காரணத்தையும் போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர். இந்த மரணத்திற்கான காரணம் தற்போது வரை மர்மமாகவே உள்ளது.