| ADDED : மார் 22, 2024 05:54 AM
புதுச்சேரி : 'காங்., - பா.ஜ., ஆகிய இரு தேசிய கட்சிகளும் புதுச்சேரிக்கு இழைத்து வரும், துரோக செயலை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்' என, அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க வேட்பாளராக, தமிழ்வேந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், உப்பளத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில், அ.தி.மு.க.,வினர் நேற்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். வேட்பாளருக்கு சால்வை அணிவித்து, வாழ்த்துக்களை தெரிவித்தனர். மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது: தமிழ்வேந்தன் பண்புள்ள, ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள மீனவ சமுதாயத்தில் பிறந்தவர். ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளை தொடர்ந்து செய்து வருபவர். அவர் நிச்சயம் வெற்றி பெறுவார்.ஆளும் அரசு இந்த மூன்றாண்டு காலத்தில் அனைத்து விதத்திலும் தோல்வி கண்ட அரசாக உள்ளது. புதுச்சேரியில் ஆளும் பா.ஜ., கூட்டணியால் வேட்பாளரை நிறுத்த கூட திராணி இல்லை. காங்., பா.ஜ., ஆகிய இரு தேசிய கட்சிகளும் புதுச்சேரி மாநிலத்திற்கு தொடர்ந்து இழைத்து வரும், துரோக செயலை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு கூறினார்.