புதுச்சேரி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்ததாக, அமைச்சர் அன்பரசனை கண்டித்து, புதுச்சேரி அ.தி.மு.க., சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.அண்ணா சிலை அருகில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் அன்பரசனின் படத்தை கிழித்தும், தீ வைத்து எரித்தும், அவரை பதவி நீக்க செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. அ.தி.மு.க., அவைத் தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், இணைச் செயலாளர் முன்னாள் கவுன்சிலர் கணேசன், திருநாவுக்கரசு, பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள் குணசேகரன், நாகமணி, கிருஷ்ணமூர்த்தி, குமுதன், புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மாநில செயலாளர் அன்பழகன் அளித்த பேட்டி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, அமைச்சர் அன்பரசன் அவதுாறாக பேசியது புதுச்சேரி அ.தி.மு.க., சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். மறைந்த தலைவர்களை பற்றி அவதுாறாக பேசுவது சரியல்ல. அரசியல் கட்சி துவக்கியுள்ள விஜய் பற்றி விமர்சனம் செய்வதாக இருந்தால் நேரடியாக அவரை பற்றி பேசுவது நல்ல அரசியல்வாதிக்கு அழகாகும். மறைந்த தலைவர்களை பற்றி அநாகரிகமாக பேசிய அன்பரசனை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் நீக்க வேண்டும்' என்றார்.