| ADDED : ஜூலை 31, 2024 01:47 AM
புதுச்சேரி:புதுச்சேரி சட்டசபையின் கூட்டத்தொடர் இன்று கவர்னர் உரையுடன் துவங்குகிறது. புயலை கிளப்ப எதிர்கட்சிகளுடன், பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களும் திட்டமிட்டுள்ளனர். புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 5 மாத செலவினத்திற்கு ரூ. 4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. யூனியன் பிரதேசமான புதுச்சேரி அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய, மத்திய அரசின் அனுமதி கடந்த வாரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இன்று 31ம் தேதி காலை 9:30 மணிக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் கவர்னர் ராதகிருஷ்ணன் உரையுடன் துவங்குகிறது.நாளை 1ம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. நாளை மறுநாள் 2ம் தேதி காலை 9:30 மணிக்கு, நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, ரூ. 12,700 கோடிக்கான மாநில அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு நடக்கிறது. லோக்சபா தேர்தல் தோல்விக்கு காரணமான அமைச்சர்களை மாற்ற வேண்டும் பா.ஜ., மற்றும் பா.ஜ., ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ., க்கள் போர்கொடி துாக்கியுள்ளனர். மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ., பொறுப்பாளர்களை டில்லியில் சந்தித்து பேசியும் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.இதனால் கடும் கோபத்தில் உள்ள பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்ளிட்டோரை சந்தித்து சட்டசபை கூட்ட தொடர் குறித்து பேசினர். இதனால், நடக்கவுள்ள சட்டசபை கூட்டத் தொடரில் ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக, ஆளும் பா.ஜ., மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் எதிர்க்கட்சியான தி.மு.க.,வுடன் சேர்ந்து புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளதால் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.