| ADDED : ஆக 18, 2024 04:20 AM
சங்கராபுரம் : சேஷசமுத்திரம் முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம் கிராமத்தில் கடந்த 2015ம் ஆண்டு மாரியம்மன் கோவில் தேர்திருவிழா நடந்த போது, பொது பாதையில் தேர் செல்வது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே தகராறு ஏற்பட்டு தேர் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதனையொட்டி, கிராமத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.இந்நிலையில் கடந்த ஆண்டு கோவில் தேர் திருவிழா நடத்த அனுமதி வேண்டி கிராம மக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அப்போதைய கலெக்டர் ஷ்ரவன்குமார், 144 தடை உத்தரவை நீக்கி தேர் திருவிழா நடத்த அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து கடந்தாண்டு மேள தாளமின்றி பொது பாதை வழியாக தேர் திருவிழா நடந்தது.இந்த ஆண்டு பொது பாதையில் மேள தாளத்துடன் தேர் திருவிழா நடத்த போலீஸ் மற்றும் தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில், காலனி தரப்பினர் அளித்த மனுவை ஏற்று மேளதாளத்துடன் பொது பாதையில் தேர்திருவிழா நடத்த எஸ்.பி., , ரஜத்சதுர்வேதி அனுமதி அளித்தார். அதனையொட்டி நேற்று மாலை 3:00 மணிக்கு எஸ்.பி., தலைமையில், டி.எஸ்.பி., குகன், இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் 700 போலீசார் பாதுகாப்புடன் தேர்திருவிழா அமைதியான முறையில் நடந்தது.