பேனர் நிறுவனங்கள் உரிமம் இன்றி செயல்பட்டால் சட்ட நடவடிக்கை ஆணையர் எச்சரிக்கை
புதுச்சேரி : பேனர் அச்சிடும் நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் முறையான அனுமதி பெற வேண்டும் என, நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் டிஜிட்டர் போர்டு, பிளக்ஸ் போர்டுக்கான பேனர்கள் அடித்து தரும் நிறுவனங்கள் நடத்தி வரும் உரிமையாளர்கள் தங்கள் கடைக்கு கொம்யூன் பஞ்சாயத்து மூலம் உரிமம் பெற வேண்டும்.மேலும் தங்கள் கடைக்கு பேனர் அடிக்க வரும் வாடிக்கையாளர்கள் அந்த பேனர் வைப்பதற்கு கொம்யூன் பஞ்சாயத்து மூலம் முறையான அனுமதி பெற்று இருந்தால் மட்டுமே பேனர் அடித்து தர வேண்டும். அதற்கான அனுமதியை அந்த பேனரில் ஓரத்தில் அச்சிட வேண்டும். இல்லையெனில் கொம்யூன் பஞ்சாயத்து விதி -1973 ன் படி தங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.