விருத்தாசலம் : விருத்தாசலம், பெண்ணாடத்தில் இரு வீடுகளில் நகை, ரொக்கம், லேப்டாப் திருடுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெண்ணாடம் அடுத்த அரியராவியை சேர்ந்தவர் ராமராசு,34; வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி ராஜலட்சுமி,33; இவர், கடந்த 1ம் தேதி சத்தியவாடியில் நடந்த தனது சகோதரர் திருமணத்திற்கு குழந்தையுடன் சென்றார்.நேற்று காலை வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதாக தகவலறிந்த ராஜலட்சுமி அதிர்ச்சியடைந்து வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 32 இன்ச் டிவி., 2 லேப்டாப், 2 சவரன் செயின் மற்றும் 10 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது.இதுகுறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். விருத்தாசலம்
மங்கலம்பேட்டை அடுத்த கோவிலானுார் காலனியை சேர்ந்தவர் சிவமணி, 42; வெளிநாட்டில் இருந்து திரும்பிய இவர், கூலி வேலை செய்து வருகிறார். சிவமணி, மனைவி அலமேலு இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு, வெளியே துாங்கினர். காலை எழுந்து பார்த்தபோது, தாழ்ப்பாளை உடைத்து கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 5 கிராம் தங்க நகை, 67 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது.இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.