| ADDED : ஜூன் 27, 2024 02:44 AM
புதுச்சேரி: இணையத்தில் 'ஆபாச படம் பார்த்துள்ளீர்கள், உங்களை கைது செய்ய உள்ளோம்' என மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் அரங்கேறி வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.புதுச்சேரியில் தினசரி புது புது விதங்களில் சைபர் கிரைம் மோசடிகள் அரங்கேறி வருகிறது. பார்சலில் போதை பொருள் வந்துள்ளது. உங்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய உள்ளோம் என மிரட்டி பணம் பறித்தனர்.தற்போது இணையத்தில் ஆபாச படம் பார்த்துள்ளீர்கள் உங்களை கைது செய்ய உள்ளோம் என மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் துவங்கி உள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞரை தொடர்பு கொண்ட மர்ம நபர், நீங்கள் குழந்தைகள் சம்பந்தமான ஆபாச வீடியோவை மொபைல்போனில் பார்த்ததை தமிழக சைபர் கிரைம் போலீஸ் கண்டுபிடித்துள்ளது. உங்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய உள்ளோம் எனவும், வழக்கில் இருந்து தப்பிக்க மர்ம நபர் கூறும் வங்கி கணக்கில் பணம் செலுத்த கூறி, ஏமாற்றி வருகின்றனர். புதுச்சேரியில் நேற்று முன்தினம் மட்டும் 4 பேருக்கு இதுபோன்ற மிரட்டல் வந்துள்ளது. புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'இதுபோன்ற சைபர் கிரைம் போலீசில் இருந்து பேசுவதாக கூறுவது இணைய வழி மோசடிக்காரர்களின் கைவரிசை. யாரேனும் தொடர்பு கொண்டு மிரட்டினால், அருகில் உள்ள போலீஸ் நிலையம் அல்லது புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்' என்றனர்.