| ADDED : ஜூன் 03, 2024 05:26 AM
புதுச்சேரி : கூனிச்சம்பட்டு மார்க்கெட் கமிட்டியில் வியாபாரிகள் முறையாக பணம் பட்டுவாடா செய்யாமல், அலைக் கழிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.புதுச்சேரி, கூனிச்சம்பட்டில் மார்க்கெட் கமிட்டி செயல்பட்டு வருகிறது. இங்கு புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் பயிரிடும் நெல், மணிலா, காராமணி, உளுந்து உள்ளிட்ட தானியங்களை விற்பனை செய்து வருகின்றனர்.விவசாயிகள் விற்பனை செய்யும் விளைப் பொருட்களுக்கான பணத்தை வியாபாரிகள் சரியான முறையில் வழங்குவதில்லை என, விவசாயிகள் குற்றம் சாட்டினர். மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளிடம் விளைபொருட்களை வாங்கும் வியாபாரிகள், அதற்கான பணத்தை உடனடியாக வழங்காமல், கமிட்டி அதிகாரிகள் ஒத்துழைப்புடன் ஒரு மாதம், இரண்டு மாதம் என காலம் கடத்தி வழங்கி வருகின்றனர். கமிட்டிக்கு நேரில் வந்து வழங்காமல் அவர்களுடைய அலுவலகங்களுக்கு விவசாயிகளை வரவழைத்து அலைக்கழிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், மார்க்கெட் கமிட்டியில் பொருட்களை விற்பனை செய்த விவசாயிகள், அதற்கான பணம் உடனடியாக கிடைக்காததால், மாற்று பயிர் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மார்க்கெட் கமிட்டியில் வியாபாரிகள் வாங்கும் பொருட்களை உடனடியாக அங்கிருந்து கொண்டு செல்லாமல், அதிக நாட்கள் அங்கேயே வைத்திருப்பதால், விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களை வைப்பதற்கு இடம் இன்றி திறந்தவெளியில் வைக்கும் அவலம் ஏற்படுகிறது.எனவே, விவசாயிகள் விற்பனை செய்யும் பொருட்களுக்கான பணத்தை வியாபாரிகள் உடனடியாக பட்டுவாடா செய்ய வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களை வைப்பதற்கு தேவையான இடவசதியை அரசு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.