உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சின்ன மணிக்கூண்டின் கதை தெரியுமா?

சின்ன மணிக்கூண்டின் கதை தெரியுமா?

புதுச்சேரியின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாக பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மணிக்கூண்டுகள் திகழ்கின்றன. இதில், புஸ்ஸி வீதி - காந்தி வீதி சந்திப்பில் சின்னக்கடையில் உள்ள சின்ன மணிக்கூண்டு, தங்க கொல்லுாறில் சுண்ணாம்பு கலவையை எடுத்து வைத்து கட்டுமான பணியை துவக்கிய தனிச்சிறப்புக்குரியது.பிரெஞ்சு ஆட்சியின்போது, புதுச்சேரியின் செல்வந்தராகவும், பெரிய வணிகராகவும் விளங்கிய லட்சுமணசாமி செட்டியார், நகரத்தின் மைய பகுதியில் உள்ள பெரிய மணிக்கூண்டை போலவே, ஒரு மணிக்கூண்டை தனது சொந்த செலவில் மக்களுக்காக அமைத்து கொடுக்க விரும்பினார்.இதற்காக, பிரெஞ்சு அரசிடம் தனது விருப்பத்தையும் தெரிவித்தார். அந்த காலத்தில் பிரெஞ்சுக்காரர்கள் மைசூரு மன்னருடன் நட்புடன் இருந்தனர். தனது 25ம் ஆட்சியாண்டை கொண்டாடிய மன்னர் சாம்ராஜ உடையார், கடந்த 1892 பிப்ரவரி 1ம் தேதி புதுச்சேரிக்கு வந்தார்.மன்னரின் வருகையின்போது, லட்சுமணசாமி செட்டியாரின் விருப்பத்தின்படி நினைவு சின்னமாக புஸ்ஸி வீதி - காந்தி வீதி சந்திப்பில் சின்ன மணிக்கூண்டை கட்டுவதற்கு பிரெஞ்சு அரசு அனுமதி அளித்தது. செட்டியார் செய்து கொடுத்த தங்க சொல்லுாறில் சுண்ணாம்பு கலவையை மன்னரே எடுத்து வைத்து அடிக்கல் நாட்டி, சின்ன மணிக்கூண்டு அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.கடந்த 1921ம் ஆண்டு, 25 அடி உயரத்தில் எண்கோண வடிவத்தில் மூன்று மாடிகளுடன் சின்ன மணிக்கூண்டு கட்டி முடிக்கப்பட்டது. மணிக்கூண்டில் உள்ள இரண்டாவது மாடியில் நேரம் காட்டும் கடிகாரம் வைக்கப்பட்டது. அந்தாண்டு மார்ச் மாதம் 21ம் தேதி, அப்போதைய பிரெஞ்சு மேயர் ெஹன்றி கெப்ளே தலைமையில் கோலாகலமாக நடந்த விழாவில் கவர்னர் ழெர்பினி, சின்ன மணிக்கூண்டை திறந்து வைத்து புதுச்சேரி மக்களுக்கு அர்ப்பணித்துள்ளார்.இந்த தகவல்கள், சின்ன மார்க்கெட்டில் அமைந்துள்ள மணிக்கூண்டில் உள்ள கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ