| ADDED : மே 05, 2024 05:46 AM
மரக்காணம் ;l கோட்டக்குப்பம் பகுதியில் குறைந்த மின்னழுத்த பிரச்னை காரணமாக, மின்சாரமின்றி, பொதுமக்கள் இரவு நேரங்களில் சாலைகள் மற்றும் கடற்கரை பகுதியில் துாங்கும் அவல நிலை உள்ளது.விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட புதுச்சேரியொட்டி கோட்டக்குப்பம், சின்னகோட்டக்குப்பம், பெரியமுதலியார்சாவடி ஆகிய பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் உள்ளது. இதனால் இந்த பகுதியில் அதிகளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.ஆனால், மின்துறை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய அளவே மின்சாரம் வழங்கி வருகிறது. மின்சார பயன்பாட்டிற்கு ஏற்றார்போல் கூடுதல் மின் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பகல் மற்றும் இரவு நேரத்தில் குறைந்த மின்னழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.தங்கும் விடுதி, ஓட்டல்களில் ஜெனரேட்டர் பயன்படுத்தி மின்சார பிரச்னையை சரிசெய்து கொள்கின்றனர். ஆனால், குடியிருப்புகளில் மின் விசிறி ஏ.சி., உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் இயங்காமல் மக்கள் அவதியடைகின்றனர். கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், இரவு நேரங்களில் துாக்கம் வராமல், தவித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களாக மக்கள் சாலைகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் துாங்குகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சாலைகளில் துாங்குபவர்களுக்கு விஷ ஜந்துக்களால் பிரச்னை ஏற்படுவதற்கு முன் கோட்டக்குப்பம் பகுதியில் நிலவிவரும் குறைந்த மின்னழுத்த பிரச்னையை சரிசெய்ய, மின்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இந்நிலையில் நேற்று சின்னகோட்டக்குப்பம், சுப்பிரமணியபுரம், பைரவர் கோவில் எதிரில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நடந்தது. குறைந்த மின்னழுத்தம் உள்ள அனைத்து இடங்களிலும் புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.