புதுச்சேரி: கர்நாடகா பா.ஜ.,வினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், புதுச்சேரி பா.ஜ., நிர்வாகிகள் பெங்களூருவில் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.புதுச்சேரி பா.ஜ., பொறுப்பாளராக, கர்நாடகாவை சேர்ந்த நிர்மல்குமார் சுரானா உள்ளார். கடந்த சட்டசபை தேர்தலின்போது பா.ஜ.,வின் வெற்றிக்காக, நிர்மல்குமார் சுரானா தலைமையில் கர்நாடகாவில் இருந்து ஏராளமான பா.ஜ., நிர்வாகிகள் சட்டசபை தொகுதி வாரியாக புதுச்சேரியில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றினர்.சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுக்கு அமோக வெற்றியையும் தேடி தந்தனர். அதுபோல, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும் நிர்மல்குமார் சுரானா தலைமையில் கர்நாடகாவை சேர்ந்த பலர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், தற்போது கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது.இந்நிலையில், கர்நாடகா பா.ஜ.,வினருக்கு நன்றி தெரிக்கும் வகையில், புதுச்சேரியில் இருந்து பா.ஜ., தலைவர் செல்வகணபதி எம்.பி., அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களும், நிர்வாகிகளும் பெங்களூருவில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றினர்.பெங்களூரு உள்ளிட்ட தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதையடுத்து, தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பு, தெருமுனை பிரசாரம் போன்றவற்றில் தீவிரம் காட்டிய புதுச்சேரி பா.ஜ.,வினர் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.