உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேர்தல் நன்னடத்தை விதியில் இருந்து அனைத்து மதுக்கடைகளுக்கும் விலக்கு

தேர்தல் நன்னடத்தை விதியில் இருந்து அனைத்து மதுக்கடைகளுக்கும் விலக்கு

புதுச்சேரி: அனைத்து மதுக்கடைகளுக்கும் தேர்தல் நன்னடத்தையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் தங்களுடைய உரிம நேரம் வரை திறந்து இருக்கலாம் என, கலால் துறை அறிவித்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் 85 சாராயக்கடைகள், 55 கள்ளுக்கடைகள் என, மொத்தம் 390 மதுபான கடைகள் உள்ளன. லோக்சபா தேர்தலையொட்டி, நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், அனைத்து மதுக்கடைகளையும் இரவு 10:00 மணிக்குள் மூட தேர்தல் துறை உத்தரவிட்டது. ஓட்டுப் பதிவு கடந்த 19ம் தேதி நடந்தபோதிலும், தொடர்ந்து இரவு 10 மணிக்கே அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. இதனால் தங்களுடைய வருமான இழப்பு ஏற்படுவதாக மதுக்கடை உரிமையாளர்கள் கலால் துறையிடம் கடிதம் எழுதி முறையிட்டனர்.கலால் துறையும் தேர்தல் துறைக்கு கடிதம் அனுப்பி அனுமதி கோரி இருந்தது. இதற்கு தேர்தல் துறையும் பச்சைகொடி காட்டியுள்ளது. மாநிலத்தில் உள்ள மது கடைகள் அனைத்தும் தங்களுடைய உரிமத்தின்படி வழக்கமான நேரம் வரை திறந்து செயல்படலாம் என, கலால் துறை அறிவித்துள்ளது.எனவே, எப்.எல்-1 எனப்படும் மொத்த மது விற்பனை மதுக்கடைகள், எப்.எல்-2 எனப்படும் சில்லறை மதுவிற்பனை கடைகள், காலை 8:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை வழக்கம்போல் திறந்து செயல் படலாம்.சுற்றுலா பிரிவின் கீழ் உள்ள ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள் இரவு 12:00 மணி வரை திறந்து இருக்கலாம். கள்ளு, சாராயக்கடைகள் காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை வழக்கம்போல் திறந்து இருக்கலாம். இதற்கான ஆணையை கலால் துணை ஆணையர் மாத்யூ பிரான்சிஸ் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ