| ADDED : ஜூலை 23, 2024 02:41 AM
புதுச்சேரி : தமிழக அரசு வேளாண் துறையில் ஆய்வாளர் வேலை என போலி பணி ஆணை வழங்கி ரூ. 19.79 லட்சம் மோசடி செய்த நாமக்கல் திருநம்பியை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி சஞ்சீவி நகரை சேர்ந்தவர் ரவி மகன் கணேஷ், 24; அரசு வேலை தேடி வந்த இவருக்கு, கடந்தாண்டு இன்ஸ்டாகிராம் மூலம் நாமக்கல் பெரியபட்டி, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ரிஷிகேஷ் (எ) கார்த்திக், 38; என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.அப்போது ரிஷிகேஷ், தி.மு.க., பிரமுகரான தனக்கு தமிழகத்தில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் நன்கு தெரியும் என கூறியுள்ளார். அதனை நம்பிய கணேஷ், தனக்கு தமிழக அரசில் வேலையும், தனது சகோதரிக்கு ஜிப்மரில் செவிலியர் பணி வாங்கி தருமாறு கேட்டார். அதில் தமிழக அரசு வேலைக்காக கடந்தாண்டு செப்., மாதம் முதல் ஜனவரி வரை கூகுள்-பே மூலம் ரூ. 19.79 லட்சம் பணம் ரிஷிகேஷிற்கு அனுப்பினார்.அதனைத் தொடர்ந்து ரிஷிகேஷ் வாட்ஸ் ஆப் மூலம் தமிழக வேளாண் துறையில் விழுப்புரம் மாவட்டத்தில் பட்டு நுால் கழக ஆய்வாளர் பணிக்கான நியமன ஆணையை அனுப்பி வைத்தார்.அந்த பணி ஆணையை கணேஷ், விழுப்புரத்திற்கு கொண்டு சென்றபோது, அது போலி என்பது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த கணேஷ், ரிஷிகேஷை தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி கேட்டபோது, அவர் பணத்தை தராமல் ஏமாற்றினார்.இதுகுறித்து கணேஷ் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், பெண்ணாக பிறந்து, கல்லுாரி படிக்கும் போது ஆணாக மாறி திருநம்பியாக வலம் வந்து இதேபோன்று பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்து வருவதும், கடந்த 2018ம் ஆண்டு திருநெல்வேலியில், 2 திருநங்கை உள்ளிட்ட 3 பேரை வெட்டி கொலை செய்து கிணற்றில் வீசிய வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்து நாமக்கல்லில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.அதன்பேரில் வடக்கு கிரைம் போலீசார் நாமக்கல் சென்று ரிஷிகேஷை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.