புதுச்சேரி : புதுச்சேரியில் 7 பேரிடம் 5.28 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்தவர்அஜித். இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், வங்கி அதிகாரி போல பேசினார். அதில், போனஸ் வெகுமதி தருவதாக, அதற்கான ஏ.டி.எம்., விபரம் மற்றும் மொபைல் போனுக்கு வந்த ஓ.டி.பி., எண்ணை கேட்டார். அடுத்த நிமிடத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 3.39 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது. மேலும், முதலியார்பேட்டையை சேர்ந்த பாஸ்கர். இவரை மர்ம நபர் ஒருவர் மொபைல் போனில், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். அதை நம்பி அவர் 85 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்து ஏமாந்தார். அதே போல, உப்பளம் பகுதியை சேர்ந்த வினித், 54 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். தொடர்ந்து, புதுச்சேரியை சேர்ந்த ஆகேஷ். இவர் பி.எஸ். 3 ஆன்லைன் மூலம் 17 ஆயிரம் ரூபாய் ஆடர் செய்து, ஏமாந்தார். மேலும், திருக்கனுார் பகுதியை சேர்ந்த அரவிந்த், இவருக்கு மர்ம நபர் வீடியோ கால் செய்து, அந்த வீடியோவை வைத்து, மிரட்டி,14 ஆயிரம் ரூபாயை மர்ம நபருக்கு அவர் அனுப்பி ஏமாந்தார். அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் இளம்பாரதி, 10 ஆயிரம் ரூபாய், லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த சசிதரன், 9 ஆயிரம் ரூபாய் மர்ம கும்பலிடம் பணம் அனுப்பி ஏமாந்துள்ளனர். இதுகுறித்து, 7 பேர் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.