| ADDED : மே 19, 2024 03:26 AM
புதுச்சேரியை துாய்மையான நகரமாக மாற்ற 15 நாட்களுக்குள் செயல் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என, கவர்னர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் குப்பைகள் சரிவர அகற்றப்படாதது குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய கவர்னர் ராதாகிருஷ்ணன், தனியார் குப்பை நிறுவனங்களுக்கான பில் செட்டில்மெண்ட் கோப்பை அதிரடியாக நிறுத்தி வைத்தார்.இதையடுத்து, குப்பைகள் விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். ராஜ்நிவாசில் நடந்த இந்த கூட்டத்தில் கவர்னரின் செயலர் நெடுஞ்செழியன், உள்ளாட்சித் துறை இயக்குநர் சக்திவேல், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன் மற்றும் நகராட்சி ஆணையர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவர்னர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்த அதிரடி உத்தரவுகள்:இந்தியாவின் துாய்மையான நகரமாக புதுச்சேரியை மாற்றுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அதற்கான செயல்திட்டத்தை அடுத்த 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சேரும் குப்பைகளில் இதுவரை 85 சதவீதம் மட்டுமே அகற்றப்பட்டு வருகிறது. குப்பைகள் முழுமையாக அகற்றப்பட வேண்டும்.உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், கடை வீதிகள் போன்ற அதிக குப்பைகள் சேரும் இடங்களில் இருந்து முறையாக குப்பைகள் அகற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். கட்டடம் இடிக்கப்பட்ட காரைக் கட்டிகள் அதற்கான இடங்களில் கொட்டப்பட வேண்டும்.கழிவுநீர் வாய்க்கால்கள், கால்வாய்கள் ஆகியவற்றை முறையாக துார்வாரி பராமரிக்க வேண்டும். தேவையான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி திடக்கழிவு மேலாண்மையை பலப்படுத்த வேண்டும்.குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பைகள் முறையாக மறுசுழற்சி செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அங்கு தயாரிக்கப்படும் உரம், வண்டல் மண் ஆகியவை விவசாயிகளுக்கு முறையாக கிடைக்க செய்ய வேண்டும்.வீடுகளில் குப்பைக் கழிவுகள் முறையாக வெளியேற்றப்படுவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, பள்ளி மாணவர்கள் மத்தியிலும் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.தொடர்புடைய அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு கவர்னர் உத்தரவிட்டார்.
மக்கள் பிரதிநிதிகளுடன் ஆய்வு
தேர்தல் நன்னடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டவுடன், முதல்வர், அமைச்சர்களோடு கலந்தாலோசனை செய்து குப்பைகளை வார தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கவர்னர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.