புதுச்சேரி, : புதுச்சேரியில், 7 பேரிடம் 1.57 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, எல்லைப்பிள்ளை சாவடியை சேர்ந்தவர் சித்ரா. இவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர், குறைந்த வட்டிக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் தருவதாகவும், இதற்குசெயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும் என, கூறினார். அதை நம்பி அவர், 7 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார்.காட்டுக்குப்பத்தை சேர்ந்த சத்தியராஜ் என்பவர் தனது மகனுக்கு, திருமண வரன் தேடி பதிவு செய்தார். அவரை வாட்ஸ் ஆப் மூலம் அணுகிய நபர், மணப்பெண் இருப்பதாக கூறி, 58 ஆயிரத்து, 500 ரூபாய் ஏமாற்றி பெற்றார். மணவெளி, பகதலவாசு என்பவரின் கிரெடிட் கார்டில் இருந்து, 56 ஆயிரத்து 270 ரூபாய், கனிமொழி என்பவரின் வங்கி கணக்கில் இருந்து 3 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது. உருளையன்பேட்டையை சேர்ந்த கோபிநாத் ஆன்லைனில் முதலீடு செய்து, சம்பாதிக்கலாம் என, மர்ம நபர் கூறியதை நம்பி, ரூ.24 ஆயிரத்து 930 ஏமாந்தார். அதே பகுதி ஆகாஷ் ஸ்ரீதரன் ஆன்லைன் விளையாட்டில், 7 ஆயிரம் ரூபாய் ஏமாந்தார்.இவர்கள் 7 பேரும் 1.57 லட்சம் ரூபாய் இழந்துள்ளனர்.அரியாங்குப்பத்தை சேர்ந்த தமிழ் முகுந்தன் லோன் ஆப் மூலம், கடன் பெற்று அதை செலுத்தவில்லை. அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி, கடன் தொகை செலுத்துமாறு மர்ம கும்பல் மிரட்டி உள்ளது.இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மோசடி நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.