புதுச்சேரி : தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் நடக்கிறது.திண்டிவனம் அடுத்த தீவனுார் கிராமத்தில் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவில் உள்ளது. தேசிங்கு ராஜன் செஞ்சியை ஆண்டபோது, வாலாஜாப்பேட்டை முருகப்பன் என்ற வியாபாரி, உளுந்துார்பேட்டை சந்தைக்கு 100 மூட்டை மிளகு கொண்டு சென்றார்.வழியில் தீவனுார் விநாயகர் கோவிலில் தங்கியபோது, அவரிடம் கோவிலை பராமரித்த ஏகாம்பரம், சுவாமிக்கு பொங்கல் தயாரிக்க மிளகு கேட்டார். தான் கொண்டு செல்வது மிளகு இல்லை, உளுந்து என்றார். ஏகாம்பரம் மிளகின்றி பொங்கல் செய்து படைத்தார்.முருகப்பன் உளுந்துார்பேட்டை சந்தைக்கு சென்றபோது, மிளகு மூட்டைகள், உளுந்து மூட்டையாக மாறி இருந்தது. அவரிடம், 'என் சன்னிதிக்கு சென்று மன்னிக்கும்படி பிரார்த்தனை செய்' என அசரீரி கூறியது. முருகப்பன் தீவனுார் கோவில் சென்று, மன்னிப்பு கேட்டு, சந்தைக்கு சென்றார். அங்கு, உளுந்து மூட்டைகள் மிளகு மூட்டைகளாக மாறியிருந்தன. அவர், தீவனுாரில் விநாயகருக்கு கோவில் கட்டி, பொய்யா மொழி விநாயகர் என்ற திருப்பெயரில் பதிகம் பாடினார் என்பது தல வரலாறு.இக்கோவில் கும்பாபிஷேகம், வரும் 21ம் தேதி, திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் முன்னிலையில் நடக்கிறது.கும்பாபிஷேக விழா, விநாயகர் பூஜையுடன் நேற்று துவங்கியது. இன்று கணபதி, நவகிரக, கன்னிகா, சுமங்கலி, கோ பூஜை, மாலை முதற்கால பூஜை நடக்கிறது. 21ம் தேதி காலை 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.ஏற்பாடுகளை கும்பாபிஷேக குழு தலைவர் ரவி, செயலாளர் சோமசுந்தரம், ஞானசம்பந்தம், துணை தலைவர்கள் செல்வபெருமாள், பாஸ்கரன், கோவில் பரம்பரை அறங்காவலர் சகுந்தலாவின் மகன் மணிகண்டன், கோவில் அர்ச்சகர்கள் கமலஹாசன், சரவணன் செய்துள்ளனர்.