பயிற்சிக்கு குறைந்த எண்ணிக்கையில் செயலர், இயக்குநர்கள் வருகை
சபாநாயகர் செல்வம் ஆதங்கம்புதுச்சேரி: செயலர், துறை இயக்குநர்களுக்கான பயிற்சியில் குறைவானவர்களே பங்கேற்றுள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.டில்லி கர்மயோகி பாரத் திறன் மேம்பாட்டு ஆணையம், புதுச்சேரி அரசு நிர்வாக சீர்த்திருத்தத்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி சன்வே ஓட்டலில் நடந்தது.கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினர். அரசு அதிகாரிகள், ஊழியர்கள் திறன் மேம்பாட்டிற்காக கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு முன்னதாக பயிற்சி பட்டறை நடந்தது. 55 அரசு துறைகளின் செயலர், துறை இயக்குநர்கள் பங்கேற்ற வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், 5 செயலர்கள், 20க்கும் குறைவான துறை இயக்குநர்களே கலந்து கொண்டனர்.இந்நிலையில், சபாநாயகர் செல்வம் பேசுகையில், 'இப்பயிற்சிக்கு 5 செயலர், 18 இயக்குநர்கள் தான் வந்துள்ளனர். 55 துறைகள் இருந்தும் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவு.அரசு பணியில் உள்ள அதிகாரிகள் மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்க இதுபோன்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதை கொண்டு செல்லும் கடமை அரசு அதிகாரிகளுக்கு உண்டு. அத்தனை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் புதுச்சேரி சிறந்த வளர்ச்சி அடையும். பயிற்சியில் பங்கேற்றுள்ள அதிகாரிகள் மாநில வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்பை அளிக்க வேண்டும், என்றார்.