உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சென்டாக் அலுவலகத்தில் நுாலகம் மாணவர்களின் நேரத்தை பயனுள்ளதாக மாற்ற புதுமை

சென்டாக் அலுவலகத்தில் நுாலகம் மாணவர்களின் நேரத்தை பயனுள்ளதாக மாற்ற புதுமை

இனி சென்டாக் அலுவலகம் செல்லும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் நேரத்தை மொபைல் போனில் செலவழிக்காமல் நுால்களில் மூழ்க புதிய நுாலகம் திறக்கப்பட்டுள்ளது.கருவடிக்குப்பம் இ.சி.ஆரில் உள்ள காமராஜர் மணிமண்டப வளாகத்தில் சென்டாக் அலுவலகம் இயங்கி வருகிறது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் மருத்துவம், துணை மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் ஆகிய படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்க 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருடன் பெற்றோர்களும் குவிந்து விடுவர்.கவுன்சிலிங்கில் பங்கேற்க காத்திருக்கும் நேரத்தை இங்கு வரும் அனைவருமே மொபைல் போனில் மூழ்கி வீணாக செலவழித்து வருகின்றனர். இதனை மாற்றி காத்திருப்பவர்களின் நேரத்தை பயனுள்ளதாக மாற்றவும், மாணவர்களின் கவனத்தை நுால்களின் மீது திருப்பும் விதத்தில் புதுச்சேரி கலை மற்றும் பண்பாட்டு துறை சென்டாக் வளாகத்தில் 3 ஆயிரம் சதுரடியில் புதிய நுாலகத்தை முதல்வர் ரங்கசாமியின் உத்தரவின் பேரில் திறந்துள்ளது.புதுச்சேரி ரோமன் ரோலண்ட் நுாலகத்தின் கீழ், 56வது கிளை நுாலகமாக திறக்கப்பட்டுள்ள இந்த நுாலகத்தில் தினசரி நாளிதழ்கள், வாரம் மற்றும் மாத இதழ்கள் உட்பட மொத்தம் 35 இதழ்களை படிக்கலாம்.மேலும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக 50 ஆயிரம் வேலை வழிகாட்டி நுால்கள் உள்பட மொத்தம் இரண்டு லட்சம் நுால்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி கொல்கத்தா ராஜாராம் மோகன் ராய் நுாலகத்துடன் இணைந்து ஐந்து லட்சம் டிஜிட்டல் நுால்களை இங்கு படிக்க, வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.அதற்காக பத்து கம்ப்யூட்டர்கள் பொருத்தப்படுகிறது. நுாலகம் முழுவதும் ஏ.சி., வசதியுடன், ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.இதுமட்டுமின்றி அரசு விடுமுறை நாட்கள் தவிர நாள்தோறும் பொது மக்களும் இங்கு வந்து நுால்களை படிக்கலாம். தற்போது நுாலகம் இயங்கி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !