| ADDED : ஆக 15, 2024 05:02 AM
புதுச்சேரி: தந்தையை இழந்த மாணவர்களுக்கு தாய் வழி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.சட்டசபை கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்; ஆறுமுகம் (அரசு கொறடா): சாதி மற்றும் குடியிருப்பு சான்றிதழ் பெற மாணவர்கள் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். பள்ளிகள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்து சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறை எளிமைப்படுத்தப்படுமா?முதல்வர் ரங்கசாமி: ஆமாம். பள்ளிகள் மூலமாக நிரந்தர சாதி சான்றிதழ் வழங்குவதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது. சான்றிதழ் பெறும்போது சர்வரில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்ய தகவல் தொழில்நுட்ப இயக்குனரகத்துடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.ஆறுமுகம் (அரசு கொறடா): படிப்பு முடித்த பிறகு சாதி, சான்றிதழ் கேட்டு மாணவர்கள் வருவாய் அலுவலகங்களில் குவிந்து வருகின்றனர். இதற்கு பதிலாக படிப்பு முடிவதற்கு முன்னதாகவே 5 மாதத்திற்கு முன் மாணவர்களை பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க சொல்லாம். அதன் பிறகு வீடு வீடாக சென்று வருவாய் துறை அதிகாரிகள் சரிபார்த்து சான்றிதழ்களை வழங்கலாம். இதனால் வருவாய் துறை அலுவலகங்களில் மாணவர்கள் ஒரே நேரத்தில் குவிந்து விடுவதும், வீண் அலைச்சலும் தடுக்கப்படும்.கல்யாணசுந்தரம் (பா.ஜ.,): ஜாதி சான்றிதழ்கள் ஒரே முறை வழங்கினால் போதும். ஆனால் அடிக்கடி கேட்டு பெற்றோர், மாணவர்களையும் அலைகழித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சமும் கேட்கின்றனர். பல முறைகேடுகளும் நடந்துள்ளது.நேரு (சுயேச்சை): தந்தை இறந்து விட்டால் தாய் வழியில் சான்றிதழ் வழங்குவதில்லை.இதனால் கணவரை இழந்தவர்கள், பிரிந்தவர்கள், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாவட்ட கலெக்டருக்கு தாய்வழியில் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும்.சம்பத் (தி.மு.க.,): தந்தை இறந்தார் என்றால் மாணவர்களுக்கு தாய்வழி சாதி சான்றிதழ் வழங்கலாம். நீதிமன்ற உத்தரவே உள்ளது.நாஜிம்(தி.மு.க.,): தமிழகத்தில் ஒருமுறை தான் ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் பலமுறை கேட்டு அலைகழிக்கின்றனர்.இதே கோரிக்கையை எதிர்க்கட்சி தலைவர் சிவா தி.மு.க., எம்.எல்.ஏ., சுயேச்சை எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர்.முதல்வர் ரங்கசாமி: குடியிருப்புகள் மாறலாம். ஆனால் ஜாதி மாறாது. எனவே வருவாய் துறை மூலம் ஜாதி சான்றிதழை ஒரு முறை தந்தால் போதும் என முடிவு செய்துள்ளோம்.சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி புதுச்சேரியிலும் தாய்வழியில் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.