| ADDED : ஆக 12, 2024 05:01 AM
திருபுவனை: புதுச்சேரி, மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் இருந்து தெற்கே மடுகரை, பண்ருட்டி செல்லும் சாலையில் நல்லுார் ஏரி உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த ஏரி, கிழக்கே பெரிய ஏரி, மேற்கே சின்ன ஏரி என இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது.இந்த ஏரி தண்ணீர் மூலம் கிராம விவசாயிகள் பாசன வசதி பெற்று, நெல் சகுபடி செய்து வந்தனர்.ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏரி நிரம்பும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக வடகிழக்கு பருவ மழைக்கு முன்பே நிரம்பியுள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 2.65 மீட்டர் ஆகும். தற்போது 1.50 மீட்டர் அளவிற்கு நீர் பிடிப்பு உயர்ந்துள்ளது.தொடர்ந்து ஏரிக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. ஓரிரு நாட்கள் மழை பெய்தால் நல்லுார் ஏரி முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு உள்ளது. ஏரி நிரம்பியுள்ள நிலையில் பழுதடைந்துள்ள மதகு வழியாக தண்ணீர் வெளியேறி விரயமாகிறது. புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அதிகாரிகள் ஏரியை நேரில் ஆய்வு செய்து மதகை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.