காரைக்கால்: காரைக்காலில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஓட்டு சேகரித்தார்.நேற்று பூவம், நண்டலாறு பகுதிக்கு வந்த வேட்பாளர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோரை காங்., மாவட்ட தலைவர் சந்திரமோகன் வரவேற்றார். பின், பூவம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர்.தொடர்ந்து கோட்டுச்சேரி, வரிச்சிக்குடி, திருவேட்டக்குடி, நெடுங்காடு மற்றும் நெடுங்காடு தொகுதி, காரைக்கால் வடக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர், பேசியதாவது;காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் அனைவரும் அறிந்தவர். இத்தேர்தல் ஜனநாயகத்திற்கும் அராஜகத்துக்கும் நடக்கும் தேர்தல். கடந்த 10 ஆண்டுகளாக மோடி நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி எதையும் செய்யவில்லை. தொழிற்சாலைகளை, பொதுத்துறை நிர்வாகத்தை அதானிக்கும், அம்பானிக்கும் தாரை வார்த்து கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் மட்டும் புரிந்துள்ளார்.எனவே மத்தியில் மோடி ஆட்சியை அகற்ற வேண்டும். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி என மக்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார். மத்தியில் ஆளும் கூட்டணி ஆட்சியில் ஒரு பைசா கூட வாங்க முடியாத நிலையில் ரூ. 2,650 கோடி கடன் வாங்கியது தான் அவரது சாதனை.மோடி வெளிநாட்டில் கடன் வாங்குகிறார். முதல்வர் ரங்கசாமி வெளி மார்க்கெட் மற்றும் மத்திய அரசிடம் கடன் வாங்குகிறார். ஆனால் வருவாயை பெருக்க எதையும் செய்யவில்லை. காரைக்காலை திரும்பி பார்க்காதவர் முதல்வர் ரங்கசாமி. மோடி ஆட்சியில் புதுச்சேரிக்கு எவ்வித வளர்ச்சியும் இல்லை. காரைக்கால் புறக்கணிக்கப்பட்டது.மோடியை வீட்டுக்கு அனுப்பும் நிலை தற்போது வந்துள்ளது. ராகுல் பிரதமராக வேண்டும். அப்போது தான் புதுச்சேரி, காரைக்காலில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியும். அனைவரும் கை சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு அவர், பேசினார்.நாஜிம் எம்.எல்.ஏ., முன்னாள் காங்., தலைவர் சுப்ரமணியன், தி.மு.க.,பிரமுகர் பிரபு, மகிளா காங்., மாவட்ட தலைவி நிர்மலா, ரஞ்சித், சுப்பையன் உட்பட பல்வேறு கூட்டணி கட்சி பிரமுகர்கள் உடன் இருந்தனர்.