நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் அருகே தாய், மகன், பேரனை கொலை செய்து, தீ வைத்து எரித்தவர்களை தேடி, தனிப்படை போலீசார் பெங்களூரு மற்றும் ஐதராபாத் விரைந்துள்ளனர். கடலுார் அடுத்த காராமணிக்குப்பம், ராஜாராம் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் மனைவி கமலீஸ்வரி,60; இவரது இளையமகன் சுமந்த்குமார்,37; ஐ.டி., நிறுவன ஊழியர். முதல் மனைவியை விவாகரத்து செய்த இவர், பெங்களூருவில் வேலை செய்தபோது, உடன் பணியாற்றிய அஞ்சும் சுல்தானா என்பவருடன் குடும்பம் நடத்தினார். இவர்களுக்கு இசாந்த், 8; என்ற மகன் இருந்தார்.இசாந்த், காராமணிக்குப்பத்தில் உள்ள பாட்டி கமலீஸ்வரியுடன் தங்கி, கடலுாரில் உள்ள பள்ளியில் படித்து வந்தான். ஐதராபாத்தில் பணியாற்றி வந்த சுமந்த்குமார், 10 நாட்களுக்கு முன் காராமணிக்குப்பம் வந்து, தாய் மற்றும் மகனுடன் தங்கியிருந்தார். கடந்த 13ம் தேதி முதல் அவர்களது வீடு பூட்டியிருந்தது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, வீட்டிற்குள் கமலீஸ்வரி, சுமந்த்குமார், இசாந்த் ஆகிய மூவரும் கொலை செய்யப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பெங்களூரு பெண் வரவழைப்பு
சுமந்த்குமாருடன் குடும்பம் நடத்தி பிரிந்து சென்ற அஞ்சும் சுல்தானாவை நெல்லிக்குப்பம் வரவழைத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து வெளியே வந்த அவர் கூறுகையில், எனக்கும் சுமந்த்குமாருக்கும் பிறந்த குழந்தை இசாந்த். அவன் கொலை செய்யப்பட்டதை அறிந்து போலீசார் அழைத்ததால் விசாரணைக்கு வந்தேன். சுமந்த்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்ததால் எனது மொபைல் எண்ணை சுமந்த்குமார் பிளாக் லிஸ்டில் போட்டுவிட்டார். ஆனால் எனது மகன் இசாந்துடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தேன். எனது மகனை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். என்னை போலீசார் விசாரணைக்கு எப்பொழுது அழைத்தாலும் வருவேன் என்றார். தனிப்படை பெங்களூரு விரைவு
எஸ்.பி., ராஜாராம் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி., பழனி மேற்பார்வையில் 4 தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். அதில், சப் இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான குழுவினர், சுமந்த்குமார் தங்கியிருந்த ஹைதராபாத்திற்கும், மற்றொரு குழுவினர் பெங்களூருக்கும் விரைந்துள்ளனர். உறவினர்கள் வலியுறுத்தல்
சுமந்த்குமாரின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் திரண்டு, பிரேத பரிசோதனையை முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். திட்டமிட்ட கொலை
கொலை செய்யப்பட்ட இடத்தில் எந்த தடயமும் கிடைக்காததால், இந்த கொலைகளை, அனுபவம் உள்ள கூலிப்டையை சேர்ந்தவர்கள் செய்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.கமலீஸ்வரி, சுமந்த்குமார் பயன்படுத்திய மொபைல் போன்களில் இருந்த சிம் கார்டுகளில் இருந்த பதிவுகளை அழித்துவிட்டு, அங்கேயே வீசிவிட்டு சென்றுள்ளனர். அந்த மொபைல் போன்களை போலீசார் கைப்பற்றி பதிவுகளை மீட்டெடுக்க முயற்சித்து வருகின்றனர்.மேலும் சிம்கார்டு நிறுவனங்களின் உதவியுடன், இருவரையும் தொடர்பு கொண்டவர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.கொலை செய்யப்பட்ட கமலீஸ்வரி, சுமந்த்குமார், இசாந்த் ஆகியோரது உடல்கள், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.அதையடுத்து, நேற்று மாலை 5:00 மணியளவில், கமலீஸ்வரியின் மூத்த மகன் சுரேந்திரகுமாரிடம் மூவரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டன. பின்னர், உடல்கள் முண்டியம்பாக்கத்திலேயே எரிவாயு தகன மேடையில் தகனம் செய்யப்பட்டது.