புதுச்சேரி, : புதுச்சேரி கலை விழா, நிறைவடைந்தது. புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை, தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் கலை விழா கடந்த 15ம் தேதி தொடங்கியது. விழாவில் புதுச்சேரி கலைஞர்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, அசாம், ராஜஸ்தான், மராட்டியம், மேற்கு வங்காளம், மேகலயா, குஜராத், இமாச்சலபிரதேசம், பீகார், காஷ்மீர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் மாநில கலாசார நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.இந்த கலைவிழா புதுச்சேரி கடற்கரை, லாஸ்பேட்டை காமராஜர் மணிமண்டபம், செட்டிப்பட்டு திரவுபதி அம்மன் கோவில் திடல், தொண்டமாநத்தம் சமுதாய நலக்கூடம், கரிக்கலாம்பாக்கம் அரசு கலையரங்கம் ஆகிய 5 இடங்களில் நடைபெற்றது.இதன் நிறைவு விழா, கடற்கரை சாலையில் நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு, அமைச்சர் திருமுருகன் தலைமை தாங்கினார். அமைச்சர் சாய் சரவணன்குமார் முன்னிலை வகித்தார். கலைவிழாவில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் சான்றிதழ்கள், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.முன்னதாக கலை ஆலயம் பைன் ஆர்ட்ஸ் அகாடமியின் பரதநாட்டியம், கேரளா களரி சண்டை, குஜராத் சித்திதமால், மேகாலயா வாங்கலா, பாரத் கலாமண்டலம் குழுவினரின் பரதநாட்டியம், கலைத்தாய், கலை மையம் குழுவினரின் நாட்டுப்புற நடனம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது.கலை, பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள் நன்றி கூறினார்.