உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி ஐ.டி. ஊழியரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் கடன் பெற்று மோசடி

புதுச்சேரி ஐ.டி. ஊழியரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் கடன் பெற்று மோசடி

புதுச்சேரி: புதுச்சேரி ஐ.டி.,ஊழியரிடம் பேச்சு கொடுத்து கொண்டே அவரது வங்கியில் லோன் அப்ளை செய்து ரூ. 15 லட்சத்தை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி பாரதி வீதியைச் சேர்ந்தவர் தஜித், 27; தனியார் ஐ.டி. நிறுவன ஊழியர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்பு கொண்ட மர்ம நபர், 'பேடக்ஸ்' கூரியர் மூலம் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு, துணிகள் மற்றும் போதை பொருட்கள் வந்துள்ளதாக தெரிவித்தார். உடனடியாக சைபர் கிரைம் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் பேசுங்கள் என தொலைபேசி இணைப்பை மாற்றிகொடுத்தார்.எதிர்முனையில் பேசிய மர்ம நபர், மும்பை அந்திரி போலீஸ் நிலைய அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டு, ஸ்கைப் வீடியோ காலில் தோன்றி பேசினார். தனக்கும் கூரியர் பார்சலுக்கும் சம்பந்தம் இல்லை என கூறியும், தஜித்தின் ஆதார் கார்டு தகவல்களை பெற்று விசாரணை நடத்தினார். தஜித் வங்கி கணக்கில் சட்டவிரோத பணம் வந்துள்ளதா என ஆய்வு செய்ய வங்கி கணக்கு விபரங்களை கேட்டனர். தஜித் அளித்த வங்கி கணக்கில் பணம் ஏதும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த சைபர் கிரைம் மோசடி கும்பல், தஜித்திடம் பேச்சு கொடுத்து கொண்டே, அவரது வங்கி கணக்கு மூலம் ஆன்லைனில் தனி நபர் (பர்ஸ்னல்) லோன் அப்ளை செய்தனர்.அந்த சமயத்தில், தங்களுக்கு சட்ட விரோதமாக வந்த ரூ. 15 லட்சம் உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்புகிறோம். அந்த பணம் வந்தவுடன், எங்களுடைய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறியுள்ளனர். தஜித் அதற்கு சம்மதம் தெரிவித்தவுடன், லோன் அப்ளை செய்தபோது வங்கியில் இருந்து வந்த ஒ.டி.பி. தகவல்களையும் தெரிவித்துள்ளார்.அடுத்த சில நிமிடத்தில் தஜித் வங்கி கணக்கிற்கு ரூ. 15 லட்சம் பணம் வந்தது. அந்த பணத்தை மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு தஜித் அனுப்பினார். அடுத்த சில நிமிடத்தில் இணைப்பை துண்டித்து விட்டனர். அதன் பின்னரே வங்கி கணக்குகளை ஆய்வு செய்தபோது, லோன் பெற்று அந்த பணத்தை திருடியுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்த தஜித் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்