| ADDED : மே 05, 2024 04:44 AM
சொகுசு படகுகள் தயார் செய்யும் மையமாக மாறுகிறது புதுச்சேரி உப்பளம் துறைமுகம். புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன், சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட கன்டெயினர்கள் டெலிவரி செய்யும் பணி நடந்து வந்தது.திடீரென இந்த சேவை நிறுத்தப்பட்டு, இதற்கு பயன்படுத்தப்பட்ட ஹோப்செவன் கப்பல் பயன்பாடின்றி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் துறைமுக வளாகத்தில் பின்.என்.டி. மரைன் கிராப்ட் என்ற தனியார் நிறுவனம் சொகுசு படகுகளை தயார் செய்து அந்தமான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறது.அதிகப்பட்சமாக 'செமி சம்மெரின் பாட்டம் கிளாஸ்' என்ற சொகுசு படகுகளை தயாரிக்கிறது. இது என்ன வகையான படகு என்றால், நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்தால் எப்படி ஆழ்கடல் அதிசயங்களை காணமுடியுமோ அதேபோல், இந்த படகில் கடலில் பயணம் செய்யும் போது படகின் மூழ்கி இருக்கும் கீழ் பகுதியில் பயணிகள் அமர்ந்து கொண்டு ஆழ்கடலை ரசித்த வாறே பயணிக்கலாம்.இதற்காக படகின் கீழ், பகுதியில் 'ஏசி' வசதியுடன் பயணிகள் அமர்ந்து கொண்டு கண்ணாடி வழியே பார்க்கும் வகையில், இந்த படகு தயார் செய்யப்படுகிறது. 12 மீட்டர் நீளம் 2.9 மீட்டர் அகலத்தில் 16 பேர் பயணம் செய்யும் ஒரு படகின் விலை 70 லட்சம் ரூபாய் ஆகிறது.பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப படகின் விலைகள் உள்ளன. தற்போது அந்தமான், மாலத்தீவு உள்ளிட்ட கடல் சுற்றுலா பகுதிகளில் இந்த படகிற்கான தேவை அதிகளவு உள்ளது. அதன் காரணமாக புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் அந்தமானிற்கு மட்டும் நான்கு செமி சம்மெரின் பாட்டம் கிளாஸ் படகுகள் வேகமாக தயார் செய்யப்பட்டு வருகிறது.மாலத்தீவிற்கும் இதேபோன்று படகுகள் விரைவில் தயார் செய்து அனுப்பவுள்ளதாக இந்நிறுவன ஊழியர்கள் கூறினர். இதனால் சொகுசு படகுகள் தயார் செய்யும் மையமாக புதுச்சேரி மாறி வருகிறது.