புதுச்சேரி : பிளஸ் 1 தேர்வில் புதுச்சேரி மாநிலம் 97.75 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.புதுச்சேரி, காரைக்கால் அரசு பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாட திட்டம் கடந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் பிளஸ் 1 வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது. அரசு பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் தேர்வை எழுதவில்லை.புதுச்சேரியில் தனியார் பள்ளிகள் தமிழக அரசின் பாட நுால் கழகத்தின், பாட திட்டத்தை பின்பற்றி வருகிறது. அப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 1 தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 100 தனியார் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது. புதுச்சேரி பிராந்தியத்தில் 3,660 மாணவர்கள், 3,306 மாணவிகள் உட்பட 6,966 பேர் தேர்வு எழுதினர். 3,546 மாணவர்கள், 3,273 மாணவிகள் என, 6,819 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 97.89 ஆகும். காரைக்கால் மாவட்டத்தில் 249 மாணவர்கள், 395 மாணவிகள் என 644 பேர் தேர்வு எழுதினர். மாணவர்கள் 226, மாணவிகள் 394 தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.27 ஆகும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் மொத்தமாக 3,909 மாணவர்கள், 3,701 மாணவிகள் என 7610 பேர் தேர்வு எழுதினர். 3,772 மாணவர்கள், 3,667 மாணவிகள் என, 7,439 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 97.75 ஆகும்.புதுச்சேரியில் 44 பள்ளிகள், காரைக்காலில் 9 பள்ளிகள் என 53 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.